தமிழ்நாட்டை தொடர்ந்து தெலுங்கானாவில் அமைய இருந்த செமி கண்டக்டர் ஆலையும் வேறு மாநிலத்துக்கு மாற்றம்; மோடி அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
டெல்லி: தமிழ்நாட்டை தொடர்ந்து தெலுங்கானாவில் அமைய இருந்த செமி கண்டக்டர் ஆலையும் வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் தொடங்க இருந்த ஆலையை, நிறுவனத்தை மிரட்டி ஆந்திராவில் தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என மோடி அரசு மீது காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். ஆந்திராவில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க கடந்த வியாழன் அன்று நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டனி கட்சிகள் ஆளும் மாநிலங்களில்தான் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும் என மோசி அரசு மிரட்டுகிறது என ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷின் சமுக வலைதள பதிவில்;
மோடி அரசு நாட்டில் 4 செமி கண்டக்டர் உற்பத்தித் ஆலைகள் அமைக்க பச்சைக்கொடி காட்டி உள்ளது. இது தொடர்பாக விரிவான ஆய்வுகளை செய்த பிறகு, ஒரு முன்னணி தனியார் நிறுவனம் தெலுங்கானாவில் ஒரு திட்டத்திற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தது. இது ஆந்திராவிற்கு இடம்பெயர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அங்கீகரிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பே இதேபோன்ற இடமாற்றம் கட்டாயப்படுத்தப்பட்டது. 2 செமி கண்டக்டர் உற்பத்தித் ஆலைகள் அவற்றின் முன்மொழியப்பட்ட இடத்தை தெலுங்கானாவிலிருந்து குஜராத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதேபோல், தமிழ்நாட்டிற்காக திட்டமிடப்பட்ட மற்றொரு தொழிற்சாலை குஜராத்திற்கு மாற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஒப்புதல் பெற்றது என தெரிவித்துள்ளார்.