எனது வேலை அணிக்காக ஆடுவது மட்டுமே: ஆட்டநாயகன் கோஹ்லி நெகிழ்ச்சி
வெற்றிக்கு பின் ஆட்டநாயகன் கோஹ்லி கூறுகையில், ``ஒரு முக்கியமான ஆட்டத்தில் அரை இறுதியை உறுதி செய்வதற்காக சிறப்பாக பேட் செய்ய முடிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரோஹித் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், போட்டியில் சிறப்பாக பங்களிக்க முடிந்தது மகிழ்ச்சி. அதிக ரிஸ்க் எடுக்காமல் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிடில் ஓவர்களை ஆட திட்டமிட்டோம். இறுதிக்கட்டத்தில் ஸ்ரேயாஸ் வேகத்தை அதிகரித்தார். நானும் சில பவுண்டரிகள் அடித்தேன். இதனால் எனது இயல்பான ஆட்டத்தை ஆட வாய்ப்பு கிடைத்தது. என் முக்கிய வேலை ஒவ்வொரு பந்தையும் 100 சதவீதம் கவனத்தை செலுத்தி விளையாடுவது மட்டுமே. எனது வேலை நிகழ்காலத்தில் தங்கி அணிக்காக ஆடுவது மட்டுமே. இந்த போட்டியில் கில் சிறப்பாக விளையாடினார்.
அவர்தான் உலகின் நம்பர் ஒன் பேட்டர் என்பதற்கு காரணம் பவர் பிளேவில் 60 முதல் 70 ரன் எடுக்க வேண்டும். அதை அவர் சிறப்பாக செய்கிறார், என்றார். பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் கூறுகையில், ‘‘டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததை, சரியாக பயன்படுத்தவில்லை. 280 ரன் அடிக்க நினைத்தோம். இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினர். நானும், ஷகீலும் இணைந்து பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடிவு செய்தோம். இதனால்தான், துவக்கத்தில் அதிக டாட் பால்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. அதன்பிறகு, அதிரடியாக விளையாட முடிவு செய்து, தவறான ஷாட்களை ஆடி ஆட்டமிழந்துவிட்டோம். கோஹ்லி-கில் பார்ட்னர்ஷிப், எங்களது வெற்றியை தட்டிப்பறித்தது’’ என்றார். இந்தியா அடுத்ததாக வரும் 2ம் தேதி கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகிறது.
நடையை கட்டும் பாகிஸ்தான்...
2 போட்டியிலும் வெற்றிபெற்ற இந்தியா கிட்டத்தட்ட அரையிறுதியை உறுதி செய்துவிட்டது. இன்று வங்கதேசத்தை நியூசிலாந்து வென்றால் அந்த அணிக்கு மட்டுமின்றி இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பும் உறுதியாகும். ஒருவேளை இன்று நியூசிலாந்து தோற்றால் பாகிஸ்தானுக்கு சிறிய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு நடந்தால் நியூசிலாந்து கடைசி போட்டியில் இந்தியாவிடம் தோற்கவேண்டும். மறுபுறம் பாகிஸ்தான் நல்ல ரன் ரேட்டில் வங்கதேசத்தை வென்றாக வேண்டும். ஆனால் பாகிஸ்தானின் ரன்ரேட் மோசமாக இருக்கிறது. இதனால் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் வெளியேறுவது உறுதியாகிவிட்டது.