ஆசிரியர் சிறப்பு டெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை: சமீபத்தில் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது, 2011ம் ஆண்டு முன் ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவருக்கும் டெட் தேர்வு கட்டாயம் என உத்தரவிடப்பட்டது. ஓய்வு பெற 5 வருடங்கள் உள்ளவர்களுக்கு மட்டும் தளர்வு உண்டு. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சம் அரசு ஆசிரியர்கள் பாதிப்பிற்கு உள்ளானார்கள். அவர்களுக்காக சிறப்பு டெட் தேர்வை 2026ம் ஆண்டு ஜனவரி, ஜூலை மற்றும் டிசம்பரில் 3 சிறப்பு டெட் தேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டது. பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு தாள் - I மற்றும் தாள் - II என நடைபெறும். பொதுவாக 1 முதல் 5ம் வகுப்பு வரை முதல் தாளும், 6 முதல் 8ம் வகுப்பு வரை 2ம் தாளும் என நடைபெறும்.
இந்நிலையில், சிறப்பு டெட் தேர்வில் முதல் தாள் - இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அதற்கு நிகரான உள்ள பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. 2ம் தாள் - பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இதற்கு நிகரான பதவிகளில் இருப்பவர்களுக்கு நடத்தப்படுகிறது.
1.9.2025 தேதிக்கு முன்னர் பணியில் சேர்ந்தவர்கள் சிறப்பு டெட் தேர்வை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், வட்டார வளமைய பயிற்றுநர் மற்றும் இப்பதவிகளுக்கு நிகரான பதவிகளில் உள்ளவர்கள் எழுதலாம். தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் சிறப்பு டெட் தேர்வை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வழியாக நவம்பர் 20ம் தேதி (இன்று) முதல் டிசம்பர் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள டிசம்பர் 21 முதல் 22 வரை அவகாசம் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 1800 425 6753 என்ற எண்ணிலும், trbgrievances@tn.gov.in என்ற இ-மெயில் முகவரி மூலமும் அணுகலாம். முதல் தாள் 2026ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதியும், 2ம் தாள் ஜனவரி 25ம் தேதியும் நடைபெற உள்ளது.