ஆசிரியர்கள் ஓய்வூதியம்: ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளிக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் ஜபிஎப், சிபிஎஸ் உள்ளிட்ட மனுக்கள் அதிக அளவில் உரிய காரணங்கள் இல்லாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தந்த மாவட்டங்களில் ஏப்ரல் 2024 முதல் 2025ம் ஆண்டு வரையில் ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறப்போகும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் ஓய்வு ஊதியம் பொது வருங்கால வைப்பு நிதிக் கருத்துருக்களை மாநில கணக்காயர் மற்றும் பங்களிப்பு ஓய்வு ஊதிய கருத்துருக்களை அரசு தகவல் தொகுப்பு மையத்துக்கு வரும் 28ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, ஓய்வூதிய நிலுவை இனங்களை முடிக்கும் வகையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் நாளை கூட்டம் நடக்க உள்ளது. இதையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர்களாக செயல்படும் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர் மேற்கண்ட கருத்துருக்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இணைய தளம் வழியாக ஆய்வு நடத்தியும், ஒரு வாரத்துக்குள் மாநில கணக்காயர் அலுவலத்துக்கு அனுப்பி அது தொடர்பான விவரங்களை பள்ளிக்கல்வி இயக்குநருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆய்வு அலுவலர்கள் பங்கேற்க வேண்டும். இதன்படி செங்கல்பட்டு மாவட்டம்- இயக்குநர் கண்ணப்பன், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் பழனிச்சாமி-சென்னை, தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ்-திருவள்ளூர், ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் சாந்தி-காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மாவட்ட ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இவர்கள் தவிர பிற மாவட்டங்கள் என மொத்தம் 30 மாவட்டங்களுக்கு ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.