ஆசிரியர்களை உருவாக்கும் ஆசிரியர் :அபாகஸ் ஜமுனா!
ஒரு பெண் தொடங்கும் தொழில் வெற்றியடைந்தால், நிறைய பெண்கள் தொழில் முனைவோர் உருவாக மிகச்சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் என்கிறார் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜமுனா. இவர் வீட்டிலிருந்தே அபாகஸ் பயிற்சி வகுப்புகள் நடத்திவரும் கல்வியாளர் மற்றும் அபாகஸ் பயிற்சியாளர். ஆசிரியர்கள் இல்லத்தரசிகள், மாணவ மாணவிகள், என பலருக்கும் அபாகஸ் பயிற்சி வகுப்புகளை நடத்திவரும் இவர், பல பெண் தொழில்முனைவோரை உருவாக்கி அசத்தி வருகிறார். இவர் அபாகஸ் கற்றுக்கொள்வதன் பயன் மற்றும் பயிற்சி வகுப்புகள் குறித்து பல்வேறு தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
அபாகஸ் கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது எப்போது?
நான் ஆசிரியர் பட்டயப் படிப்பு படித்து பின்னர் B.sc ( maths) முடித்துள்ளேன். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டத்தில் உள்ள ஒண்ணுபுரம் என்ற கிராமத்தில் பிறந்து அரசு பள்ளியில்தான் படித்தேன். பள்ளிப் படிப்பின் போதே தந்தையை இழந்த என்னை எனது சித்தப்பாதான் படிக்க வைத்தார். ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் போது அங்கு பணிபுரியும் கணித ஆசிரியர்களுக்கு அபாகஸ் பயிற்சி அளித்தனர். அங்கு தான் அபாகஸ் பயிற்சி பெற்றேன். அங்கு பயிற்சி முடித்த பின்னர் அபாகஸ் ஆசிரியராக அதே பள்ளியில் வேலை செய்தேன். அதன் பிறகு திருமணம், குழந்தைகள் என வாழ்க்கை செல்ல துவங்கியது. எனக்கு நெடுநாட்களாக வீட்டிலிருந்தே ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்கிற எண்ணங்கள் இருந்தது. அப்பொழுது தான் மாணவர்களுக்கு அபாகஸ் வகுப்பு எடுக்கலாம் என்கிற யோசனை தோன்றியது. தற்போது நிறைய பிள்ளைகளுக்கு தனியாக அபாகஸ் பயிற்சி எடுத்து வருகிறேன். ஒரு தனியார் பள்ளியிலும் அதன் ஆசிரியர்களுக்கு பகுதி நேரமாக அபாகஸ் கற்றுத் தருகிறேன். தனியாகவும் சில ஆசிரியர்களுக்கு அபாகஸ் பயிற்சி அளித்து வருகிறேன். தற்போது பலரும் அபாகஸ் கற்றுக் கொள்ள வருகிறார்கள்.
அபாகஸ் கற்பதன் நன்மைகள் என்ன?
அபாகஸ் கற்றுக் கொள்வதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும். மேலும் குழந்தைகளின் கவனத்திறன் மற்றும் நினைவுத்திறன் அதிகரிக்கும். போட்டோகிராஃபிக் மெமரி development ஆகும், கணிதத்தில் அதிக ஆர்வம் ஏற்படும். மனதை ஒருமுகப்படுத்தி நன்றாக படிக்க முடியும். தற்போது இதன் பயனை உணர்ந்த பலரும் மிக ஆர்வமாக அபாகஸ் கற்று வருகின்றனர். நிறைய கணித ஆசிரியர்கள் கற்றுக்கொண்டு தங்கள் வகுப்பு பிள்ளைகளுக்கும் சொல்லி தருகிறார்கள். நிறைய பள்ளிகளில் அபாகஸ் பயிற்சி வகுப்புகள் எடுப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். பெண்கள் மற்றும் இல்லத்தரசிகள் சொந்தமாக பயிற்சி நிலையம் வைத்து பலருக்கும் கற்றுத் தந்து சம்பாதிக்கலாம்.
யாரெல்லாம் இதனை விரும்பி கற்க வருகிறார்கள்?
பள்ளி மாணவர்களுக்குத் தான் முதலில் வகுப்புகள் தொடங்கினேன். பின்னர் ஆன்லைன் மூலமாகவும் சிலருக்கு வகுப்புகள் எடுக்கிறேன். இப்போது அபாகஸ் வகுப்பு கேட்கும் அனைவருக்கும் கற்றுக் கொடுக்க நேரப் பற்றாக்குறையாக இருக்கிறது.இதற்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்கும் போது தான் நிறைய அபாகஸ் ஆசியர்களை உருவாக்கினால் பல மாணவர்கள் பயனடைவார்கள் என்று தோன்றியது. மேலும் இது என்னைப் போன்று தொழில்முனைவோராக விரும்பும் பெண்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்து அபாகஸ் ஆசிரியர் பயிற்சி (certification course) வகுப்புகளையும் முறையாக நடத்தி வருகின்றேன்.
உங்களுக்கு கிடைத்த கௌரவங்களாக எதை நினைக்கிறீர்கள்?
சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் என் மகள் படித்துவருகிறாள். மகள் 1 நிமிடம் 4 வினாடிகளில் தமிழில் உள்ள 96 வகை சிற்றிலக்கியங்கள் சொல்லிக்கொண்டே 50 கணக்குகளுக்கு அபாகஸ் முறையில் விடையளித்து உலக சாதனை படைத்துள்ளார். இதை அறிந்த அந்த பள்ளி முதல்வர் என்னை அந்த பள்ளியின் கணித ஆசிரி யர்களுக்கும் அபாகஸ் பயிற்சி அளிக்க அழைத்தார்கள் . தற்போது அந்த ஆசிரியர்கள் மிகவும் ஆர்வமாக அபாகஸ் கற்றுக் கொண்டு வருகின்றனர். எனது மகளை அபாகஸ் கணிதத்தில் உலக சாதனை படைக்க வைத்தமைக்காக சிறந்த அபாகஸ் ஆசிரியர் என்ற விருதை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பெற்றேன். கலாம் உலக சாதனை புத்தக நிறுவனம் எனக்கு inspiring women award அளித்து சிறப்பித்தது. காஞ்சிபுரம் கல்வி அமைப்பு எனக்கு பெண் சாதனையாளர் விருது அளித்து கௌரவப்படுத்தியது.
கிராமப்புற மாணவர்களுக்கு அபாகஸ் பயிற்சி அளிக்கும் திட்டம் குறித்து?
இன்னும் நிறைய அபாகஸ் ஆசியர்களை உருவாக்கி அனைத்து இடங்களிலும் உள்ள மாணவர்களுக்கு அபாகஸ் பயிற்சி கிடைக்க வேண்டும். அபாகஸ் வகுப்பு என்றால் இப்பொழுது வரை நகரம் மற்றும் பெருநகரங்களில் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள படித்த பெண்கள் அபாகஸ் பயிற்சி முடித்து அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு அபாகஸ் பயிற்சி அளிக்க முன் வரவேண்டும். நிறைய அபாகஸ் ஆசிரியர்களை கிராமப் புறங்களில் உருவாக வேண்டும் என்பது ஆசை. இன்னும் கொஞ்ச காலத்தில் கிராமப்புறங்களிலும் அபாகஸ் வகுப்புகள் கணிசமாக கிடைக்கும் அளவிற்கு அபாகஸ் பயிற்சி ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய எதிர்காலத் திட்டங்களில் முக்கியமான ஒன்று. அதற்கான திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் தீவிரமாக செய்து வருகிறேன்.
வீட்டிலிருந்தே தொழில்முனைவோராக விரும்பும் பெண்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?
ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும் பெண்கள் மற்றும் வீட்டிலிருந்தே சம்பாதிக்க நினைக்கும் பெண்களுக்கு அபாகஸ் வகுப்புகள் மிகச் சிறந்த வரப்பிரசாதம். டியூசன் என்றால் கூட வாரத்தில் 5 நாட்கள் வகுப்புகள் எடுக்க வேண்டும். ஆனால் அபாகஸ் பயிற்சி வாரத்தில் 2 நாட்கள் எடுத்தால் போதும். மேலும் அபாகஸ் வகுப்புகளுக்கு போட்டி குறைவு. என்னிடம் அபாகஸ் பயிற்சி முடித்தவர்கள் அனைவரும் இன்று தனியாக அபாகஸ் வகுப்புகள் நடத்தி பயன் அடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எங்களுடைய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெறுபவர்களுக்கு எப்படி அபாகஸ் வகுப்புகள் தொடங்குவது, அதற்கான புத்தகம், மற்றும் அபாகஸ் kit வரை நாங்கள் வழி நடத்தி வருகிறோம். இதனாலேயே நிறைய பெண்கள் என்னிடம் அபாகஸ் பயிற்சி கற்றுக் கொள்ள வருகிறார்கள்.
பொதுவாக பெண்களுக்கு அபாகஸ் வகுப்புகள் எடுப்பது மிகச் சிறந்த பணி வாய்ப்பு. இந்த துறையில் எந்த நெருக்கடிகளும் இல்லை, பெரிய அளவில் முதலீடு தேவை இல்லை. பெண்கள் முதலீடு இல்லாமல் தங்களது வீட்டிலிருந்த படியே குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு தொழிலை செய்ய நினைத்தால் அபாகஸ் துறையை தேர்ந்தெடுக்கலாம். இதற்கு தனியாக வாடகைக்கு இடம் தேவை இல்லை, வீட்டிலிருந்தே வகுப்புகள் நடத்தி சம்பாதிக்கலாம். மேலும் கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு இந்த துறையில் போட்டி என்பதே இருக்காது என தன்னம்பிக்கையுடன் சொல்கிறார் ஜமுனா.
- தனுஜா ஜெயராமன்.