நவ. 1, 2ல் ஆசிரியர் தகுதித்தேர்வு செப்.8 வரை விண்ணப்பிக்கலாம்: டிஆர்பி அறிவிப்பு
சென்னை: கடந்த 2010ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2025ம் ஆண்டில் தகுதித் தேர்வு நடத்தவும் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பை தேர்வு வாரிய http://www.trb.tn.gov.in என்ற இணைய தளத்தில் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 1ம் தேதி தாள்-1, நவம்பர் 2ம் தேதி தாள்-2 ஆகியவற்றுக்கு நடத்தப்படும். இந்த தேர்வு எழுத கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பம் சார்ந்த அனைத்து விவரங்களும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு எழுத விரும்புவோர் மேற்கண்ட இணைய தளம் மூலம் ஆகஸ்ட் 11ம் தேதி (நேற்று) முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், அறிவிக்கை தொடர்பான மனுக்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் பெறப்படும். இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம்(டிஆர்பி) தெரிவித்துள்ளது.