வகுப்பறையில் மட்டையான போதை ஆசிரியர் சஸ்பெண்ட்
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் இனாம்புதூர் ஊராட்சி வையமலைப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆவாரம்பட்டியை சேர்ந்த ஆரோக்கியராஜ்(45) ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று பிற்பகலில் பள்ளிக்கு மதுபோதையில் தள்ளாடியபடி வந்த ஆரோக்கியராஜ், வகுப்பறையிலேயே மேஜை நாற்காலிகளை தள்ளிவிட்டு சரிந்து விழுந்தார். இதை பார்த்த மாணவர்கள், அக்கம் பக்கத்திலிருந்த பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியருக்கு தண்ணீர் கொடுத்து உதவி செய்தனர். இதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து வலைதளத்தில் பரப்பினர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தகவலறிந்து வந்த வட்டார கல்வி அலுவலர் லதா, மணப்பாறை டிஎஸ்பி(பொ) கதிரவன், மணப்பாறை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட ஆசிரியரை மருத்துவ பரிசோதனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் அவர் மதுபோதையில் இருந்தது உறுதியானது. இதையடுத்து ஆரோக்கியராஜை சஸ்பெண்ட் செய்து வட்டார கல்வி அலுவலர் லதா இன்று உத்தரவிட்டார்.