ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல்
புதுடெல்லி: ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி.மாயிஷ் ஆகியோர் அமர்வு கடந்த மாதம் தீர்ப்பளித்தது. அதில், ‘‘ஆசிரியர்கள் பணியில் தொடர்ந்து நீடிக்கவும், அதேப்போன்று பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு அதாவது டெட் தேர்வு கட்டாயம். இருப்பினும் பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு ஓய்வு பெறும் வயதை அடைய ஐந்து ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் பணியில் தொடரலாம்.
இருப்பினும் அதேநேரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் கண்டிப்பாக தேர்வு பெற வேண்டும். இல்லையெனில் அவர்கள் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம். சிறுபான்மை நிறுவனங்களில் டெட் தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா?, அது அவர்களின் உரிமைகளை பாதிக்குமா? என்பது குறித்து விசாரிக்க அது தொடர்பான கோரிக்கை கொண்ட வழக்கை மட்டும் உச்ச நீதிமன்றத்தின் உயர் அமர்வுக்கு பரிந்துரைக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்து இருந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,‘‘பணியில் நீடிக்கவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று கடந்த மாதம் 1ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரத்தில் மாநில அரசு சார்ந்த சில கொள்கைகளும் உள்ளது. எனவே இதனை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொண்டு முந்தைய உத்தரவை ஆய்வு செய்து, மறு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.