மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர் நிரந்தர பணிநீக்கம்
சேலம் : ஏற்காட்டில் பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து பழங்குடியினர் நல அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில், அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், அங்குள்ள விடுதியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகளுடன் தங்கியுள்ளார்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் நெய்யமலை பகுதியை சேர்ந்த இளையகண்ணு (37) என்பவர் இப்பள்ளியில் தற்காலிக பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், அப்பள்ளியில் 10, 11ம் வகுப்பு படித்து வரும் சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவரான வெள்ளிமலையை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி, பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார்.
அதில், தன்னிடமும், தனது தோழிகள் 4 பேரிடமும் ஆசிரியர் இளையகண்ணு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தார். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர், சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதன்பேரில் அப்பள்ளிக்கு நேரடியாக சென்று குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் விசாரித்தனர். பின்னர் இதுகுறித்து கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், பட்டதாரி ஆசிரியர் இளையகண்ணு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக பழங்குடியினர் நலத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் விசாரணை நடத்திய சேலம் மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் சுகந்தி பரிமளம், தற்காலிக பட்டதாரி ஆசிரியர் இளையகண்ணுவை உடனடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் ஏற்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.