டீ கடையில் சிலிண்டர்கள் வெடித்து தீ
தண்டையார்பேட்டை: காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் உள்ள டீ கடையில் 2 காஸ் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. காசிமேடு மீன்பிடி துறைமுகம் ஐக்கிய சபை மீனவர் சங்கம் அருகே ஏழுமலை என்பவர் டீ கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இந்த கடையில் பயங்கர சத்தத்துடன் 2 காஸ் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள், வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது டீ கடை தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ராயபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.