நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பச்சை பசேல் என மாறிய தேயிலை தோட்டங்கள்
ஊட்டி : நீலகிரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், தேயிலை தோட்டங்கள் பச்சை பசேல் என காட்சி அளிக்கின்றன.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவ மழை பெய்யும்.
அதன்பின் அக்டோபர் மாதம் துவங்கிய இரு மாதங்கள் வடகிழக்கு பருவ மழை பெய்யும். இது தவிர புயல் சின்னங்கள் ஏற்பட்டால் நீலகிரி மாவட்டத்திலும் மழை கொட்டி தீர்க்கும். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை துவங்கி ஒரு சில நாட்கள் பெய்தது.
அதன்பின் மழை சற்று குறைந்து காணப்பட்டது. மழை குறைந்த நிலையில், சில நாட்கள் நீர் பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மேலும், தற்போது, தெற்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்திலும் கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் பச்சை பசேல் என காட்சியளிக்கின்றன. மேலும், தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. பொதுவாக நவம்பர் மாதங்களில் பனியின் காரணமாக தேயிலை மகசூல் குறையும்.
ஆனால், இம்முறை மாறாக நவம்பர் மாதம் மழை பெய்து வருவதால் அனைத்து தேயிலை தோட்டங்களிலும் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், பச்சை பசேல் என அனைத்து தேயிலை தோட்டங்களும் காட்சியளித்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் இந்த தேயிலை தோட்டங்களுக்கு நடுவே நின்று புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.