50% வரியால் வர்ற ஓட்டும் வராம போகுமேன்னு கவலைப்படும் மலராத கட்சி நிர்வாகிகளைப் பற்றி சொல்கிறார்: wikiயானந்தா
‘‘ரெண்டாவது மாநாடு முடிஞ்ச கையோடு பெரும்பாலான மாநில பொறுப்பாளர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டதாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரத்தில் நடந்த நடிகர் கட்சியின் மாநாட்டிற்கு சட்டமன்ற தொகுதி வாரியாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாகனங்களில் வரவேண்டுமென மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துச்சாம்.. வாகன செலவிற்குரிய பணத்தை தருவதாக மாநில பொறுப்பாளர்கள் சொன்னபடி, வாகனங்களை வாடகைக்கு பேசினாங்களாம்..
மேலிடத்து உத்தரவை எப்படியாவது நிறைவேற்றி, நல்ல பெயர் வாங்கி விடவேண்டுமென்ற நோக்கத்தில் லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்ட நிர்வாகிகள் தொகுதி வாரியாக அதிகளவில் வாகனங்களை வாடகைக்கு எடுத்து சென்றார்களாம்.. ஆட்களை ஏற்றியது முதல் திரும்ப வந்து இறக்கிவிடும் வரை டிபன், டீ, சாப்பாடு, ஸ்நாக்ஸ், தண்ணீர் என அனைத்தையும் செலவு செய்தாங்களாம்.. மாநாடு முடிந்து திரும்ப வந்ததும், சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கான டீசல் தொகை மற்றும் பேட்டாவை மட்டும் கொடுத்திருக்காங்க..
வாடகை பணத்தை தருவதாகக் கூறி திருப்பி அனுப்பினார்களாம்.. மாநில பொறுப்பாளர்களிடம் பேசி வாகன வாடகை பணத்தை மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம் என்பதால், சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டாங்களாம்.. ஆனால், பெரும்பாலான பொறுப்பாளர்களின் செல்போன் எண்கள் இன்று வரை சுவிட்ச் ஆப்பில்தான் உள்ளதாம்.. இதனால், பணம் கிடைக்காமல், வாடகை வாகனங்களுக்கு பணத்தை கொடுக்க முடியாமல் மிகுந்த சங்கடத்தில் இருக்கிறார்களாம்..
எப்படி பணத்தை செட்டில் செய்வது என வழி தெரியாமல் பலரும் சைலண்ட் மோடுக்கு போகும் மனநிலையில் உள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ரெஸ்டோ பார் விவகாரம் ரெஸ்ட் எடுக்க... புதுப்பிரச்னை புதுச்சேரி அரசுக்கு ஷாக் கொடுத்து இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சுற்றுலா பகுதியான புதுச்சேரியில் பூதாகரமான ரெஸ்டோ பார் விவகாரம் தற்போதுதான் ஓய்ந்ததாம்.. அதற்குள் புது பிரச்னையாக கரண்ட் விவகாரம் புல்லட்சாமி அரசுக்கு ஷாக் அடித்துள்ளதாம்..
அதாவது பங்குச்சந்தையில் அதானி எலக்ட்ரிசிட்டி- புதுச்சேரி என பெயர் மாற்றம் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட புதுச்சேரி கரண்ட் துறை தனியார் மயமாகி விட்டதாக ஊர்முழுக்க பரபரப்பான பேச்சாம்.. ஏற்கனவே கரண்ட்டை தனியார் மயமாக்குவதை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்தி பிரச்னை சட்டசபை வரையிலும் சென்றிருந்த நிலையில், வருடந்தோறும் கட்டண உயர்வு இருந்தாலும் தனியார் மயமில்லை என்ற ஆறுதல் உள்ளூர்வாசிகளுக்கும், பணியாளர்களுக்கும் இருந்ததாம்..
மீண்டும் கரண்ட் தனியார் மயமாகி விட்டதாக தகவல் பரவி மீண்டும் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறதாம்.. அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும் அடுத்தடுத்த போராட்டங்களுக்கு திட்டமிட ஆளும் தரப்போ பிரச்னையை ஆறப்போடுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாம்.. தேர்தல் நெருங்குவதால் மலராத கட்சியின் மத்திய பிரதிநிதிகளிடம் ஆளும் தரப்பு முறையிட்டுள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கேமரா வைப்பதாக வசூல் நடத்தி, 35எல் ஸ்வாகா செஞ்சிட்டாராமே ஸ்டார் காக்கி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நார்த் ஷோன் காக்கிகள் லிமிட்ல, அந்த ஆபிசர் பொறுப்பேற்றதுக்கு அப்புறமாக, கிரிவலம் மாவட்டம் பட்டு நகர லிமிட்ல, சட்டவிரோத செயல்கள் நிறுத்தப்பட்டதாம்.. இதனால அந்த லிமிட்ல இருக்குற காக்கிகளுக்கு சம்திங் நின்று போச்சாம்..
இதனால ஹைடெக் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி குற்ற சம்பவங்களை முழுமையாக தடுத்து நிறுத்தப்போவதாக சொல்லி, ஸ்டார் காக்கி, பட்டு நகர்ல இருக்குற விவிஐபி, விஐபி, தொழிலதிபர்கள், வியாபாரிகள், மணல் மாபியாக்கள் மற்றும் செல்போன் சர்வீஸ், சலூன் கடை சங்கம் வரை பெரிய லிஸ்ட் எடுத்து, 350 சிசிடிவி கேமரா பொருத்துவதாக கூறினாராம்.. இதுல ஒரு எல் முதல் 5 எல் வரைனு 50 எல் வரையும் வசூல் நடந்துச்சாம்..
டவுன் பகுதியில் முக்கியமான இடங்களில் மட்டும் 13 எல்லுக்கு 120 கேமராக்களை மட்டும் பொருத்தி விட்டு, 35 எல்லுக்கு மேல் ஸ்வாகா பண்ணிட்டாராம்.. மீதமுள்ள கேமராவை அவர் வீட்டுக்கு பொருத்திகிட்டாராம்.. வசூல் செய்த காசுக்கு டிவிஷன் முழுசுமாகவே குற்ற சம்பவங்களை தடுக்குற வகையில் சிசிடிவி கேமராவை பொருத்தியிருக்கலாம்னு மக்களின் புலம்பல் சத்தம் ஒலிக்குதாம்.. காக்கிகள் நூதன மோசடி வழக்கு சம்பந்தமா ஐஜியோட நேரடி விசாரணை வேண்டும்னு கோரிக்கை குரல் வேற கேட்க தொடங்கியிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஐம்பது சதவீத இறக்குமதி வரி விதிப்பு மான்செஸ்டர் மாவட்ட மலராத கட்சி நிர்வாகிகளை ரொம்பவே குமுற வைச்சிருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அமெரிக்காவின் 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு மேற்கு மண்டலத்தில் இருக்கிற தொழில் துறையினரை கடுமையாக பாதிச்சிருக்காம்.. ஒன்றிய அரசு இந்த விவகாரத்தை சரியா கையாளாமல் விட்டுவிட்டதாக தொழில் அமைப்பினர் கடும் கோபத்துல இருக்காங்க..
இதேபோல, தொழிலாளர்களும் வேலை இழக்கிற அபாயம் இருக்கிறதால ஒன்றிய அரசு மேல கடும் அதிருப்தி ஏற்பட்டு இருக்கு.. இந்த அதிருப்தி வர்ற எலக்சன்ல கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும், இந்தப் பக்கம் இருக்க கொஞ்சநஞ்ச ஓட்டும் கிடைக்காம போயிடுமேன்னு மலராத கட்சி நிர்வாகிகள் புலம்பிட்டு இருக்காங்களாம்..
அதிலும் குறிப்பா மான்செஸ்டர் மாவட்டத்தில் இருக்கிற மலராத கட்சியோட தேசிய நிர்வாகி தன்னோடு நெருக்கமானவர்களிடம் இதுபற்றி புலம்பி தள்ளுகிறாராம்.. இதை சரி கட்டறதுக்கு நிதியை கவனிக்க கூடிய ஒன்றிய அமைச்சரை அழைத்து வந்து தொழில் அமைப்புகளோடு கூட்டம் நடத்தி கோபத்தை தணிக்கிறதற்கான நடவடிக்கை எடுங்கன்னு வற்புறுத்திட்டு இருக்காங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.