வரிக்கு மேல் வரி விதிக்கும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது: ரஷ்ய அதிபர் புடின் பேச்சு
மாஸ்கோ: அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் சீனாவும், இந்தியாவும்தான் உக்ரைன் போருக்கு ‘முதன்மையான நிதியளிப்பாளர்கள்’ என்று குற்றம் சாட்டினார்.
இந்தச் சூழலில் ரஷ்ய அதிபர் புடின் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற வல்தாய் கலந்துரையாடல் குழுவின் அமர்வில் பேசிய அதிபர் விளாடிமிர் புடின், ‘ரஷ்ய கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தும்படி இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவின் முயற்சிகளைக் கண்டிக்கிறேன். இந்தியா அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாது. யாரிடமும் தன்னைத் தானே அவமானப்படுத்திக் கொள்ளாது.
பிரதமர் மோடி சமநிலையான மற்றும் புத்திசாலித்தனமான தலைவர். இந்திய மக்கள், தங்கள் அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளை உன்னிப்பாகக் கவனிப்பார்கள். யாரிடமும் அவமானப்படுவதை அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எனக்கு பிரதமர் மோடியைத் தெரியும்; அவர் ஒருபோதும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க மாட்டார். இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி என்பது முற்றிலும் பொருளாதாரக் கணக்குகளுடன் தொடர்புடையது. இதில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை.
ரஷ்யா - இந்தியா இடையிலான உறவுகளின் சிறப்பு தன்மையானது, சோவியத் யூனியன் காலத்திலிருந்தே தொடர்கிறது. இந்தியா தனது சுதந்திரத்திற்காகப் போராடிய காலத்திலிருந்தே இரு நாடுகளுக்கு இடையிலான உறவு நீடிக்கிறது. இதை இந்திய மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள்; மதிக்கிறார்கள். இந்தியா அதை மறக்காததை நாங்கள் பாராட்டுகிறோம். இந்தியாவுடன் எங்களுக்கு ஒருபோதும் பிரச்னைகளோ, அரசுகளுக்கு இடையேயான பதற்றங்களோ இருந்ததில்லை. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது.
அதைக் குறைப்பதற்காக, இந்தியாவிடமிருந்து அதிக விவசாயப் பொருட்கள் மற்றும் மருந்துகளை ரஷ்யா வாங்கும். எங்கள் வாய்ப்புகளையும், சாத்தியமான நன்மைகளையும் பயன்படுத்திக் கொண்டு, முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்போம். ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிறப்பு கூட்டாண்மை பிரகடனம் விரைவில் வெளியிடப்படும். இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் உறவுகளில், தங்கள் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்துக்கொள்கின்றன. வரும் டிசம்பர் மாதம் இந்தியா சென்று எனது நண்பர் மற்றும் எங்கள் நம்பகமான கூட்டாளி மோடியை சந்திக்க ஆவலாக உள்ளேன்’ என்றார்.
* அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவது ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளை கடுமையாக சேதப்படுத்தும். ரஷ்ய ராணுவம் மெதுவாக ஆனால் நிலையான முன்னேற்றங்களை மேற்கொண்டு வரும் போர்க்களத்தில் நிலைமையை மாற்றாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்தார்.