அமலில் உள்ள வரியுடன் 25+25% கூடுதலாக உயர்வு இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா வரிப்போர்: அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் பரபரப்பு, ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதால் கடும் அதிருப்தி
நியூயார்க்: இந்தியா மீது மேலும் 25 சதவீத வரி விதித்தது மூலம் இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் 2ம் முறையாக பதவி ஏற்ற நாள்முதலே இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஒரு புறம் எனது நண்பர் பிரதமர் மோடி என்கிறார். மறுபுறம் உலகிலேயே இந்தியாதான் அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டி வருகிறார். பிரதமர் மோடியை அழைத்து வெள்ளை மாளிகையில் வைத்து விருந்து கொடுக்கிறார்.
இருநாடுகள் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். மறுபுறம் இந்தியாவுக்கு எதிராக அத்தனை அஸ்திரங்களையும் ஏவி வருகிறார். உலக நாடுகளுக்கு விதித்தது போல் இந்தியாவுக்கு வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடந்தது. இது தோல்வி அடைந்ததால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என கடந்த மாதம் 31ம் தேதி அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்த கூடுதல் வரி விதிப்பு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்திருந்தார். அத்துடன் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை வாங்கும் இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரியை அபராதமாக விதிப்பதாக டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இதையடுத்து முதல்முறையாக ஒன்றிய அரசு டிரம்ப் அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டது. இது குறித்து ஒன்றிய அரசின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்கா தனது அணுசக்தி தொழிலுக்கான யுரேனியம் ஹெக்ஸாபுளோரைடு, மின்சார வாகனத் தொழிலுக்கான பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனங்களை ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்கிறது’ எனத் தெரிவித்து இருந்தது.
இந்தியாவின் எதிர்ப்பை பற்றி எல்லாம் கவலைப்படாத டிரம்ப் நேற்று அதிரடியாக இந்திய பொருட்களுக்கு மேலும் 25 சதவீத வரி விதித்து உள்ளார். இந்த புதிய வரி அடுத்த 21 நாட்களுக்கு பிறகு அமலுக்கு வரும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அதில்,’ செப்டம்பர் 17 ஆம் தேதிக்கு முன்பு ஏற்கனவே இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு போக்குவரத்தில் உள்ள ஏற்றுமதிகளைத் தவிர, உத்தரவு கையெழுத்திட்ட 21 நாட்களுக்குப் பிறகு அமெரிக்காவிற்குள் நுழையும் அனைத்து தகுதியான இந்திய பொருட்களுக்கும் புதிய வரிகள் பொருந்தும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் இந்திய பொருட்களுக்கு தற்போது உள்ள வரி, இன்று முதல் அமலுக்கு வர உள்ள 25 சதவீத வரி, ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடுதலாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரியால் இந்தியா மீது அமெரிக்கா பகிரங்கமாக வரிப்போரை தொடங்கி உள்ளதாக உலக நாடுகள் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தகம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.
* இந்தியாவுக்கு எதிரான பொருளாதார அச்சுறுத்தல்: ராகுல்காந்தி ஆவேசம்
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில்,’ டிரம்பின் 50% வரி என்பது பொருளாதார அச்சுறுத்தல். இது இந்தியாவை நியாயமற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்குள் தள்ளும் முயற்சி. இந்த விசயத்தில் பிரதமர் மோடி தனது பலவீனம் இந்திய மக்களின் நலன்களை விட மேலோங்க விடாமல் இருப்பது நல்லது’ என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில்,’ அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியின் நண்பர் என்று கூறிக் கொண்டாலும், இந்தியாவை கடுமையாகவும் அநியாயமாகவும் தாக்கியுள்ளார். அவரது வரி மற்றும் அபராத நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றாலும், மோடியின் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் தலைகீழாகப் பேசும் பாணியின் படுதோல்வியையும் அவை பிரதிபலிக்கின்றன என்பது உண்மைதான்.
1970களில், குறிப்பாக இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில், அமெரிக்காவின் கொடுமைப்படுத்துதலை இந்தியா எதிர்த்தது. அவரை அவதூறு செய்வதற்கும், திரிப்பதற்கும், இழிவுபடுத்துவதற்கும் பதிலாக, பிரதமர் மோடி தனது ஈகோவை விட்டுவிட்டு, அவர் அமெரிக்காவை எதிர்த்து நின்ற விதத்திலிருந்து உத்வேகம் பெற வேண்டும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் நிர்வாகத்திற்கு விரிவான மறுசீரமைப்பு தேவை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
* என்ன செய்யப்போகிறார் மோடி?
இந்தியாவுக்கு எதிராக வரிப்போரை தொடங்கி உள்ள டிரம்பை எதிர்கொள்ள முடியாமல் ஒன்றிய அரசு திணறி வருகிறது. டிரம்ப்பின் மிரட்டலுக்கு பயந்து ரஷ்யாவை பகைத்துக் கொள்ள பிரதமர் மோடிக்கு மனமில்லை. ஆனால் டிரம்ப்பின் இந்த இமாலய வரி விதிப்பால், இந்தியாவிற்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்ன பதில் சொல்லப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
* சீனா, பாக்கை விட இந்தியாவுக்கு அதிகம்
அமெரிக்காவிற்குள் இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான மொத்த வரிகளை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது சீனா மீதான வரியை விட 20 சதவீதம் அதிகமாகவும், பாகிஸ்தானை விட 21 சதவீதம் அதிகமாகவும் உள்ளது.
* மருந்துகளுக்கு வரிவிலக்கு
இந்திய பொருட்களுக்கு கடும் வரி விதிப்பை டிரம்ப் மேற்கொண்டாலும் எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள் உள்ளிட்ட சில முக்கிய பொருட்களுக்கான வரித்தளர்வும் இந்த உத்தரவில் இடம் பெற்றுள்ளது
* அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்
வெள்ளை மாளிகை வெளியிட்ட உத்தரவின்படி, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் பிற வர்த்தகச் சட்டங்கள் அடிப்படையில் பார்க்கும் போது, இந்தியா மேற்கொண்டுள்ள ரஷ்ய எண்ணெய் இறக்குமதி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அமெரிக்காவிற்கு அசாதாரண அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
* டிரம்ப்புக்கு பதில் மோடியுடன் பேசுவேன்
இந்தியாவை போல் பிரேசில் நாட்டிற்கும் 50 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ளார். இதுபற்றி பேச பிரேசில் அதிபர் லுூயிஸ் லூலா எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம் என்று டிரம்ப் தெரிவித்தார். அதற்கு லூலா கூறுகையில்,’ அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து விவாதிக்க ஒரு போதும் டிரம்ப்பை அழைக்க மாட்டேன். அதற்கு பதில் நான் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அழைப்பேன். இந்திய பிரதமர் மோடியை அழைப்பேன். நிச்சயமாக டிரம்ப்பை நான் அழைக்க மாட்டேன். நீங்கள் உறுதியாக நம்பலாம்’ என்றார்.
* இந்தியா, பிரேசில்தான் டாப்
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பில் பிரேசிலுக்கு 50 சதவீதமும் அதை தொடர்ந்து தற்போது இந்தியாவுக்கு 50 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த வரிசையில் மியான்மர் (40 சதவீதம்), தாய்லாந்து, கம்போடியா (தலா 36 சதவீதம்), வங்கதேசம் (35 சதவீதம்), இந்தோனேசியா (32 சதவீதம்), சீனா மற்றும் இலங்கை (தலா 30 சதவீதம்), மலேசியா (25 சதவீதம்), பிலிப்பைன்ஸ், வியட்நாம் ( தலா 20 சதவீதம்) நாடுகள் உள்ளன.
* எந்த துறைகள் பாதிக்கப்படும்?
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் இந்தியாவில் ஜவுளி, ஆடை, ரத்தினக் கற்கள், நகைகள், இறால், தோல் மற்றும் காலணிகள், விலங்கு பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் மின் இயந்திரங்கள் ஆகிய துறைகள் பாதிக்கப்படும். அமெரிக்காவிற்கான இந்தியாவின் 55 சதவீத ஏற்றுமதியை பாதிக்கும் என்று இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் அஜய் சஹாய் கூறினார்.
* நியாயமற்றது இந்தியா பதில்
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதித்ததற்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று பதில் அளித்துள்ளது. அதில்,’ அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி நியாயமற்றது, சரியாக புரிந்து கொள்ள முடியாதது, எந்தவித காரணமும் இல்லாதது. இருப்பினும் இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்’ என்று தெரிவித்துள்ளது.