‘வரி ஏய்ப்பு செய்தவர் விஜய்’: செம்மலை குற்றச்சாட்டு
சேலம்: சேலத்தில், அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் விஜய் தவழும் குழந்தை. நடை பழக, யாருடைய கையையாவது பிடித்து தான் பழக வேண்டும். அதற்குள் அனைத்தும் நான் தான் என பெருமை பேசிக்கொள்கிறார். கொட்டி கிடக்கும் செங்கற்கள் கோபுரமாகி விடாது. அதுபோல் கூடும் கூட்டத்தை பார்த்து, அவர் வாக்குகளாக மாறிவிடும் என்று எண்ணி விடக்கூடாது. அவரது படங்கள் திரைக்கு வந்து பிளாப் அடைந்துள்ளது.
அதுபோல தான், தேர்தலுக்கு பிறகு, அவரது அரசியல் பிரவேசமும் பிளாப்(தோல்வி) ஆகிவிடும். அவரது பேச்சில் பக்குவம் இல்லை. அவர் வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை வாங்கினார். அதற்கு அரசுக்கு செலுத்த வேண்டிய நியாயமான வரியை கூட கட்டாமல் வரி ஏய்ப்பு செய்தார். வரியை செலுத்தாமல் இருந்த அவர், ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற ஆட்சியை அமைப்பேன் என்று கூறுவதை மக்கள் எப்படி நம்புவார்கள்? இவ்வாறு அவர் தெரிவித்தார்.