வரி குறைப்புக்குப் பிறகு புதிய ஜிஎஸ்டி தொடர்பாக 3,000 புகார்கள் வந்துள்ளன: நுகர்வோர் விவகார துறை தகவல்
புதுடெல்லி: வரி குறைப்புக்குப் பிறகு புதிய ஜிஎஸ்டி தொடர்பாக நுகர்வோர் உதவி எண்ணுக்கு 3,000 புகார்கள் வந்திருப்பதாக நுகர்வோர் விவகார செயலாளர் நிதி கரே நேற்று தெரிவித்துள்ளார். குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் நாடு முழுவதும் கடந்த 22ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம், தினசரி பயன்பாட்டு பொருட்களின் விலை குறைந்து அதன் பலன்கள் நேரடியாக நுகர்வோருக்கு வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. ஆனால், புதிய ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு முன்பே பல பொருட்களின் விலையை பெரு நிறுவனங்கள் உயர்த்தி விட்டதால், மக்களுக்கு எந்த பலனும் சென்றடையவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. இதற்கிடையே, புதிய ஜிஎஸ்டி அமல்படுத்துதல் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க தேசிய நுகர்வோர் உதவி எண்ணை ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. இந்த உதவி எண்ணுக்கு இதுவரை 3,000க்கும் மேற்பட்ட புகார்கள் வந்திருப்பதாக நுகர்வோர் விவகார செயலாளர் நிதி கரே நேற்று தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், ‘‘ஜிஎஸ்டி தொடர்பாக தினமும் எங்களுக்கு புகார்கள் வருகின்றன. இதுவரை சுமார் 3,000 புகார் வந்துள்ளது. நடவடிக்கைக்காக அவற்றை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்திற்கு அனுப்பி உள்ளோம். குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களின் பலன்களை வழங்குவதை தவிர்ப்பதற்காக தவறான தள்ளுபடிகள் மூலம் நுகர்வோரை ஏமாற்றும் நிகழ்வுகளை நுகர்வோர் விவகார அமைச்சகம் உன்னிப்பாக கண்காணிக்கிறது. முறைகேடுகளை கண்டறிய செயற்கை நுண்ணறிவு மற்றும் சாட்பாட் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது. தவறான தள்ளுபடிகளால் நுகர்வோரை ஏமாற்றுபவர்கள் யாராக இருந்தாலும் அதை நாங்கள் நிச்சயமாக கவனிப்போம்’’ என்றார்.