டாடா குழுமத்தின் தேர்தல் நிதியில் பாஜகவுக்கு மட்டும் 83% நிதி சென்றுள்ளது அம்பலம்
டெல்லி : டாடா குழுமத்தின் தேர்தல் நிதியில் பாஜகவுக்கு மட்டும் 83% நிதி சென்று இருப்பது அம்பலம் ஆகி உள்ளது. 2024-2025ம் ஆண்டிற்கான பல்வேறு தேர்தல் அறக்கட்டளைகளின் பங்களிப்பு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் பிரபல டாடா குழுமம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தேர்தல் நிதியாக அரசியல் கட்சிகளுக்கு ரூ.915 கோடி அளித்துள்ளது. இதில் 83% நிதியான ரூ.758 கோடி வரை பாஜகவுக்கு வழங்கியிருப்பது அம்பலம் ஆகியுள்ளது.
அதே சமயத்தில், காங்கிரஸ் கட்சிக்கு 8.4 சதவீத நிதியை மட்டுமே டாடா குழுமம் வழங்கியுள்ளது. முன்னதாக கடந்த 2018-19ம் ஆண்டில் டாடா குழுமம் ரூ.454 கோடியை தேர்தல் நிதியாக அரசியல் கட்சிகளுக்கு வழங்கியுள்ளது. அதில் 75% நிதியான ரூ.356 கோடி பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு ரூ.55.6 கோடியும், திரிணாமுல் காங்கிரசுக்கு ரூ.43 கோடியும் டாடா குழுமம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.