டாஸ்மாக் வழக்கு: தொழிலதிபர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த அவமதிப்பு வழக்குக்கு தடை கோரிய ED மனு தள்ளுபடி
டெல்லி: டாஸ்மாக் வழக்கில் தொழிலதிபர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த அவமதிப்பு வழக்குக்கு தடை கோரிய ED மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் டாஸ்மாக் வழக்கு தொடர்பாக தொழிலதிபர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு தொடர்ந்தார்.
ஆகாஷ் பாஸ்கரன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. உயர்நீதிமன்றம் தடை விதித்த பிறகும் அமலாக்கத்துறை நடவடிக்கையை தொடர்ந்ததால் ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அவமதிப்பு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக ED உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவமதிப்பு வழக்குக்கு தடை விதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. கோரிக்கையை ஏற்க மறுத்து அமலாக்கத்துறை மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஸ்னோய் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறைக்கு எதிரான அவமதிப்பு நடவடிக்கை தொடரும்.