வனத்துறையினர் அனுமதியளிக்காததால் பாதியில் நிற்கும் தார்ச்சாலை பணிகள்
*நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வருசநாடு : வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர், கோடாலியூத்து, முத்துராஜபுரம், வண்டியூர், வீரசின்னம்மாள்புரம், காந்திகிராமம், முத்துநகர், உள்ளிட்ட மலைக்கிராமத்தில் தார்ச்சாலை வசதி இல்லாமல் பல ஆண்டுகளாகபொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாய விளைபொருட்களான பீன்ஸ், அவரை, எலுமிச்சை, கொட்டை முந்திரி ,இலவம்பஞ்சு உள்ளிட்ட விவசாய விளை பொருட்களை கொண்டு செல்வது ஒவ்வொரு நாளும் சிரமம் ஏற்படுகிறது.
வனத்துறை அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட இடங்களை எங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடம் என காலம் தாழ்த்தி வருவதாலும், சாலைகள் செப்பனிடம் பணிகள் மற்றும் புதிய தார் சாலை பணிகள் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து கிராமவாசி ஆண்டி கூறுகையில், ‘‘ஏற்கனவே போடப்பட்ட சிமெண்ட் சாலை மண் சாலைகள் கனமழையால் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாலைகளில் செல்லும்போது குண்டும் குழியுமாக மலை கிராம சாலைகள் அனைத்தும உள்ளது.
இந்நிலையில் சாலைகள் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதற்கு ஏற்கனவே பலமுறை ஊராட்சி ஒன்றிய அளவிலும் மாவட்ட அளவிலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் தார்சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இனிவரும் காலங்களில் சரியாக தார்ச்சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்திட புதிதாக வந்துள்ள தேனி மாவட்ட கலெக்டர் மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும்’’ என்றார்.