தாரமங்கலம் அருகே சேவல் திருட்டு தகராறில் கோஷ்டி மோதல்- 6 பேர் கைது
*5 வாகனங்கள் சேதம்
தாரமங்கலம் : தாரமங்கலம் அருகே சேவல்கள் திருட்டு விவகாரம் தொடர்பாக கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில், 5 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே கருக்கல்வாடி கிராமம் சேவக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(28). வெல்டிங் தொழிலாளியான இவரது அப்பா 2 சேவல் வளர்த்து வந்தார். கடந்த ஒரு வாரமாக ஒரு சேவலை காணவில்லை.
அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் பிடித்துச் சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக, நேற்று முன்தினம் மாலை, அவர்களிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கி கொண்டனர். வெளியூர்களிலிருந்து அவரவர் ஆதரவாளர்கள் வந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், களேபரம் ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில், தாரமங்கலம் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். ஆனால், 50க்கும் மேற்பட்டோர் அடித்து கொண்டதில் தடுக்க முடியாமல் போலீசார் திணறினர்.
இந்த சம்பவத்தில் அங்கிருந்த சரக்கு வாகனம் உள்பட 5 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இதையடுத்து, எஸ்ஐ மாதையன் தலைமையிலான போலீசார் கூட்டத்தை கலைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வரும் சரவணனிடம் பெறப்பட்ட புகாரின் பேரில், செல்லதுரை(29), ரமேஷ்(22), சதீஷ், பிரகாஷ்(30), பிரபாகரன்(28) மற்றும் கௌதம்(24) ஆகியோர் மீதும், எதிர் தரப்பைச் சேர்ந்த அனிதா(23) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சரவணன், செந்தில்குமார், பிரகாஷ், கவின், சசிகுமார், உதயா மற்றும் விக்னேஷ் ஆகிய 7 பேர் மீதும் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில், 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.