உலக ஜூனியர் பேட்மின்டன்: வினர்தோவை வீழ்த்தி தன்வி சர்மா வீரநடை
கவுகாத்தி: பிடபிள்யுஎப் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டியில் நேற்று, இந்திய நட்சத்திர வீராங்கனை தன்வி சர்மா, இந்தோனேஷியாவின் ஓயெய் வினர்தோவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். கவுகாத்தியில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் தன்வி சர்மா, இந்தோனேஷியாவின் ஓயெய் வினர்தோ மோதினர். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய தன்வி, 15-12, 15-7 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா, அமெரிக்காவின் ஆலிஸ் வாங்கை, 15-8, 15-5 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடினார். இன்னொரு போட்டியில் இந்தியாவின் ரக்சிதா ராம் ராஜ், சிங்கப்பூரின் ஆலியா ஜக்காரியாவை, 11-15, 15-5, 15-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். ஆடவர் பிரிவில் இந்திய வீரர் ஞான தத்து, சக இந்திய வீரர் சூர்யக்ஷ் ராவத்தை, 11-15, 15-6, 15-11 என்ற செட் கணக்கில் வென்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.