தமிழர்களின் வாக்குகளை நீக்கவும், பீகார் மக்களை தமிழ்நாட்டின் வாக்காளராக மாற்றத் தான் இந்த SIR ஆ? தி.மு.க.
சென்னை: தமிழர்களின் வாக்குகளை நீக்கவும், பீகார் மக்களை தமிழ்நாட்டின் வாக்காளராக மாற்றத் தான் இந்த SIR ஆ? தேர்தல் ஆணையம் ஓடி, ஒளியாமல் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என திமுக கேள்வியெழுப்பியுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி டிவிட்டர் பதிவில்:
தேர்தலை முறையாக, ஒழுங்காக, நேர்மையாக, உண்மையாக நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் ஒரே வேலை. ஆனால், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் நடப்பது எல்லாம் குளறுபடிகளின் உச்சமாக இருக்கிறது.
இதற்கு முன்பு தேர்தல் நடந்த மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் வாக்காளராக இருப்பவர்கள், இன்னொரு மாநிலத்திற்கு வந்து வாக்களித்திருக்கிறார்கள். ஒரே ஒரு வீட்டு முகவரியில் 66 போலி வாக்காளர்கள் இருந்திருக்கிறார்கள். ஒருவருடைய வீட்டு முகவரியில் 500 வாக்காளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என ஆதாரத்தோடு செய்திகள் வந்தன.
இதனை தமிழ்நாட்டிலும் SIR என்ற பெயரில் செய்யத் துணிந்துள்ளது தேர்தல் ஆணையம்; அதாவது SIR படிவத்தில், சமர்பிக்க தேவையான ஆவணங்களின் பட்டியலில், “01.07.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட பீகாரின் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் வாக்காளர் பட்டியலின் பிரதி” என குறிப்பிட்டுள்ளது தேர்தல் ஆணையம். இது முறைகேடு இன்றி வேறென்ன?
தமிழர்களின் வாக்குகளை நீக்கவும், பீகார் மக்களை தமிழ்நாட்டின் வாக்காளராக மாற்றத் தான் இந்த SIR ஆ? தேர்தல் ஆணையம் ஓடி, ஒளியாமல் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்! என கூறப்பட்டுள்ளது.