தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உதவி ஆணையர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 21 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.08.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் மற்றும் மகள்களின் மேற்படிப்பிற்கான கல்வித் உதவித்தொகையாக 600 மாணவர்களுக்கு மொத்தம் 60 இலட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு தலா ரூ.10,000/-க்கான வங்கி வரைவோலைகளை வழங்கினார். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகப் பணி தொகுதியில் உதவி ஆணையர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 21 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், ஒருகால பூஜை திட்டம் விரிவாக்கம், அர்ச்சகர் மற்றும் பணியாளர் நலன் காக்கும் புதிய திட்டங்கள் செயலாக்கம், துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் மற்றும் மகள்களின் மேற்படிப்பிற்கான கல்வித் உதவித்தொகை வழங்குதல்;
2025 – 2026 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், “ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் நலன் கருதி, இவ்வாண்டு 600 மாணவர்களின் மேற்படிப்பிற்காக ஆண்டொன்றுக்கு தலா ரூ.10,000/- கல்வி உதவித் தொகை வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் மற்றும் மகள்களின் மேற்படிப்பிற்காக பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி மேம்பாட்டு மைய நிதி மூலம் கல்வி உதவித் தொகையினை 600 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு ரூ.10,000/-க்கான வங்கி வரைவோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வழங்கினார்.
இதன்மூலம் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் போன்ற உயர்கல்வி பயிலும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் பயன்பெறுவர். 2023 – 2024 மற்றும் 2024 – 2025 ஆகிய நிதியாண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 900 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உதவி ஆணையர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 21 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குதல்;
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள சமய நிறுவனங்களை நிர்வகித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல், சொத்துகளை பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வரும் செயல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் பணியிடங்களில் அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செயல் அலுவலர் (நிலை-1, நிலை-3 மற்றும் நிலை-4) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 194 நபர்களுக்கும், உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட184 நபர்களுக்கும், இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 124 நபர்களுக்கும், தட்டச்சர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 143 நபர்களுக்கும் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 48 நபர்களுக்கும், என மொத்தம் 693 நபர்களுக்கு ஏற்கனவே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் ஆகிய பணியிடங்களுக்கு என மொத்தம் 34 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகப் பணி தொகுதியில் உதவி ஆணையர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 21 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் டாக்டர் சி.பழனி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.