தமிழ்நாடு நாள் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்: முதல்வர் மற்றும் துணைமுதல்வர் பெருமிதம்
சென்னை: 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. மதராஸ் மாநிலம், தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்றது 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இது அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது நிகழ்ந்தது.
1969-க்கு முன், அந்த மாநிலம் மதராஸ் மாநிலம் என்று அழைக்கப்பட்டது. பின்னர், 1969-ல், அந்த மாநிலத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என மாற்றப்பட்டது. தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
* முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடுநாள் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள். ஜூலை 18, 1967: தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது. தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்.
அதுவரை இல்லாத சிறப்பாய்த் தாய்நிலத்துக்குத் தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டி 'தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு' என மூன்று முறை பேரவையில் முழங்க, மேசையொலிகள் விண்ணதிர்ந்த இந்நாள்தான் தமிழ்நாடுநாள்
* துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
மெட்ராஸ் மாகாணம்' என்றிருந்த நம்முடைய மாநிலத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி.மு.கழக அரசு 'தமிழ்நாடு' என்று பெயர்ச்சூட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாள் இன்று!
ஒட்டுமொத்த தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையை 1967இல் முதன்முதலில் ஆட்சிக்கு வந்த கழக அரசு நிறைவேற்றியத் திருநாள். தமிழ்நாடு' என்று அண்ணா அவர்கள் மும்முறை முழங்க, 'வாழ்க' என்ற உறுப்பினர்களின் வாழ்த்து ஒலியால் சட்டமன்றமே உணர்ச்சிப் பெருக்கால் தத்தளித்தது.
"தமிழ்த் தாயின் நெஞ்சங் குளிர்ந்திடத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றி விட்டோம் என்கிற பூரிப்பு எல்லா உறுப்பினர்களின் உள்ளத்திலும்" என்று எழுதினார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை, அண்ணா - கலைஞர் வழிநின்று நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறியடித்தார்
நம் தலைவர்கள் போராடி மீட்டுத் தந்த தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லிக்கு காவு கொடுக்க கிளம்பியிருக்கும் பாசிசத்தின் பல்லாக்குத் தூக்கிகளை வீழ்த்துவோம். தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தை குலைக்க நினைக்கும் எதிரிகளையும், துரோகிகளையும் ஓரணியில் நின்று விரட்டியடிக்க தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம்! தமிழ் வெல்க! தமிழ்நாடு வாழ்க!!