சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அளித்த பேட்டி: அயோத்தியில் கலவரத்தைத் தூண்டி, நாடாளுமன்ற தேர்தலில் அங்கு படுதோல்வி அடைந்தார்கள். தற்போது, திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக மாற்றுவதற்கு, வெளியூரில் இருந்து ஒரு கும்பலை வரவழைத்து உள்ளூர் மக்களுக்கு எதிராக மத கலவரத்தை உருவாக்க பாஜ முயற்சி செய்கிறது. தமிழக அரசு மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழக காங்கிரஸ் சார்பில் இன்று மாலை திருப்பரங்குன்றம் சென்று முருகன் கோயிலில் ஆலய வழிபாடு செய்ய இருக்கிறோம். அதேபோன்று சிக்கந்தர் தர்காவிலும் சிறப்பு வழிபாடு செய்ய இருக்கிறோம். அரசியல் என்பது வேறு, ஆன்மிகம் என்பது வேறு. பாஜ கொடியுடன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்ல அனுமதி கொடுத்தது யார்? அந்த காலத்தில் இருந்து இந்துக்கள், இஸ்லாமியர்களும் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறார்கள். தமிழகத்தின் அமைதியை கெடுக்க வேண்டும் என்று பாஜ நினைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.