தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சிறப்பு அதிகாரியை விரைந்து நியமனம் செய்ய வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: வக்பு சட்டம் 1995ஐ திருத்தம் செய்து புதிய வக்பு சட்டம் 2025ஐ ஒன்றிய அரசு உருவாக்கி அமல்படுத்தும் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு தனது கடுமையாக எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று, ஒன்றிய அரசு அவசர அவசரமாக நடைமுறைப்படுத்தியுள்ள வக்பு திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தற்போதைக்கு தமிழ்நாடு வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அரசின் அறிவிப்பிற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதோடு, இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வக்பு வாரிய பணிகள் தொய்வில்லாமல் தொடர உடனடியாக சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கவும், சுமார் 2 ஆண்டுகளாக காலியாக உள்ள உதவி செயலாளர் 1 பணியிடத்தையும் விரைந்து நிரப்ப தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.