தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்புக்கூட்டம்: தமிழகத்தில் 37 மாவட்டங்களில் நடந்தது
சென்னை: தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற ஒரணயில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு கூட்டம் தமிழகத்தில் 37 மாவட்டங்களில் நேற்று நடந்தது. இதில் திமுக முன்னணியினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணைந்துள்ளன.
இந்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களால் முன்மொழியப்பட்டுள்ள ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்ற தீர்மான ஏற்புக் கூட்டங்கள் தமிழ்நாட்டில் செப்டம்பர் 20, 21ம் தேதிகளில் நடைபெறும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் தமிழகத்தில் 39 மாவட்டங்களில் தீர்மான ஏற்பு கூட்டங்கள் நடந்தது. இந்த நிலையில் 2வது நாளான நேற்று தமிழகத்தில் 37 மாவட்டங்களில் இந்த கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் திமுக முன்னணியினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஈரோடு வடக்கில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்பி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி ஆகியோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் தெற்கு- அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை தென்மேற்கு- சுப.வீரபாண்டியன், சென்னை கிழக்கு- டாக்டர் எழிலன் நாகநாதன், சென்னை தெற்கு- அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சென்னை மேற்கு- அமைச்சர் கோவி செழியன், சென்னை வடகிழக்கு- சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்து சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ என உறுதியேற்றனர்.