தமிழகத்தில் இன்று இயல்பை விட 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் இன்று வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி வரை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறை, சின்கோனா, சின்னக்கல்லாரில் 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி, மாஞ்சோலையில் 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
2ம் தேதி முதல் 5ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இன்றும், நாளையும் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.