தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் சிறப்பு உதவித்தொகை பெற வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 8.9.2025 மாலை 5 மணி வரை. www.sdat.tn.gov.in மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். சிறப்பு உதவித்தொகை திட்டம், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவித்திடும் திட்டம் மற்றும் வெற்றியாளர் மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றின் கீழ் தற்போது பயனாளிகளாக உள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. இந்த திட்டங்களில் பயன்பெற வீரர் மற்றும் வீராங்கனையர்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளில் பெற்ற விளையாட்டு சாதனைகள் தகுதியானதாக கருதப்படும். வயது பிரிவு அடிப்படையில் பங்கேற்றிடும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் பெற்றிருக்கும் பட்சத்தில், அதற்கான சான்றிதழை இணைத்து சமர்ப்பித்தால் மட்டுமே தகுதியாக கருதப்படும். விண்ணப்பிக்கும் நேரத்தில் கடந்த 3 மாதங்களில் குறைந்தது 9 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். விண்ணப்பித்திடுவதற்கான வயது வரம்பு வெற்றியாளர் மேம்பாட்டு திட்டத்திற்கு அறிவிப்பு தேதியின்படி 20 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவித்திடும் திட்டம், தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை திட்டங்களுக்கு வயது வரம்பு இல்லை.