தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழ்நாட்டில் கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மற்றும் நெல்லை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும். மேலும் திண்டுக்கல், திருச்சி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு.
அதேபோல் மழையின்போது மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். சென்னையில் மிதமான மழை நீடிக்கக்கூடும்” என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக நேற்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் நேற்று கனமழைக்கு வாய்ப்பு. கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு" என வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் இன்று முதல் அக்.18ம் தேதி வரை 7 முதல் 11 செ.மீ வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் கணிக்கப்பட்டுள்ளது.