தமிழகத்தில் 21ம் தேதி வரை மழை நீடிக்கும்
சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 21ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்ததை அடுத்து, 21 மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது.
குறிப்பாக திருப்பத்தூர், ஆம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, சோளிங்கர், ஆற்காடு, காவேரிப்பாக்கம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர், வடலூர், கொடைக்கானல், ஒகனேக்கல், பென்னாகரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், வேலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.
அதன் காரணமாக அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது. தஞ்சாவூர், நீலகிரி, கடலூர், மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
இந்த மழை படிப்படியாக வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து 24ம் தேதி வரை ஆந்திர, கடர்நாக எல்லையோரங்களில் பெய்யும். இந்நிலையில், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் மேலும் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலையை பொறுத்தவரையில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் படிப்படியாக உயரும் வாய்ப்புள்ளது. சென்னையில், வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.