தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: 24 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தெற்கு கேரளா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 24-ந் தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மழையும், சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. வட கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய உள்மாவட்டங்களில் இந்த கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் 24 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை, திருவாரூர், விழுப்புரம், அரியலூர், வேலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.