தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
சென்னை: வங்கக் கடலில் வடமேற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. அது மேலும் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக இன்று மாறும். பின்னர் அது ஒடிசா வழியாக மேற்கு நோக்கி செல்லும். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் 6ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 96 டிகிரி வரை இருக்கும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில், தென் தமிழக கடலோரப் பகுதிகள், வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில், சூறாவளிக் காற்று இன்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும்; இதேநிலை 6ம் தேதி வரை நீடிக்கும்.