தமிழகத்துக்கு அடுத்தடுத்து ஓரவஞ்சனை கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ரத்து: ஒன்றிய அரசு நிராகரிப்பு
* 20 லட்சம் மக்கள்தொகை இல்லை என கூறி கைவிரிப்பு
* குறைந்த மக்கள்தொகை கொண்ட வடமாநில நகரங்களுக்கு மட்டும் ஒப்புதல் அளித்து பாரபட்சம்
சென்னை: பிரதமர் மோடி இன்று கோவை வரும் நிலையில், அந்த நகரம் மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு அனுமதியை ஒன்றிய அரசு மறுத்துள்ளது. தமிழகத்திற்கு ஒன்றிய அரசு தொடர்ந்து ஓரவஞ்சனை செய்து வருவதாக கூறப்படும் நிலையில் மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி அளிக்காதது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, கடந்த 2011ம் ஆண்டில், மெட்ரோ ரயில் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தகுதியான நகரங்களாக, இந்தியாவில் 19 இரண்டாம் நிலை நகரங்களை ஒன்றிய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகம் தேர்வு செய்தது.
அந்த பட்டியலில் தமிழகத்திலிருந்து இடம்பெற்றிருந்த ஒரே நகரம், கோவை மட்டுமே. அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த கொச்சி, புனே ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால், சுமார் 14 ஆண்டுகளாகியும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் இன்னும் தொடங்கவே இல்லை. ஒன்றிய அரசு அறிவித்த மெட்ரோ திட்டத்தை எதிர்த்த அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, மோனோ ரயில் திட்டத்தையே தமிழக அரசு முன்னெடுக்கும் என்று அறிவித்தார். அதன்பின்னர் கடந்த 2017ம் ஆண்டில், கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படுவற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க முடிவானது.
அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இரு டெண்டர்களை விட்டது. இதற்கு தேர்வான சிஸ்ட்ரா என்ற ஆலோசனை நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டிலேயே சாத்தியக்கூறு அறிக்கையை தாக்கல் செய்தது. கடந்த 2021ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலுக்கு முன், பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், கோவையில் ரூ.6,683 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கப்படவில்லை.
அதன்பின், 2021-2022 பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, ஆளுநர் உரையில் இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து, அதிமுகவை சேர்ந்த தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏ வேலுமணி, பாஜவை சேர்ந்த கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகிய இருவருமே கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘கோவையுடன் சேர்த்து மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கு ஒன்றிய அரசிடம் நிதியுதவி கோரப்படும்’’ என்று பதிலளித்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை சிஸ்ட்ரா நிறுவனம் தயாரித்து, தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. சாத்தியக்கூறு அறிக்கையில் கூறப்பட்ட கோவையில் 5 வழித்தடங்களில் முதற்கட்டமாக இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் தடம் ரூ.10,740 கோடியில் அமைக்கும் வகையில், 655 பக்கங்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. இதேபோல், மதுரையில் ரூ.11,360 கோடியில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை ஒரே வழித்தடத்தில் மெட்ரோ ரயில் தடத்திற்கு 936 பக்கங்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
அதன்பின், அரசாணை வெளியிடப்பட்டு, நிலவியல் சர்வேயும் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்ட அறிக்கை, 2023 ஜூலையில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கு 2024 பிப்ரவரியில் ஒப்புதலும் தரப்பட்டது. ஆனால், கடந்த 2024ம் ஆண்டு மே மாதத்துக்கு முன்பாக தமிழக அரசு சமர்ப்பித்த இந்த அறிக்கையில் சில விரிவான விளக்கங்களை கேட்டு, சில நாட்களிலேயே ஒன்றிய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. அதாவது, 2017 மெட்ரோ ரயில் திட்ட கொள்கையின்படி, மெட்ரோ திட்டத்துடன் லைட் மெட்ரோ போன்ற மாற்று திட்டம், பி.ஆர்.டி.எஸ்., பொது போக்குவரத்து திட்டங்களுக்கான பிற விவரங்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் போக்குவரத்து வசதிகளுக்கான ஆய்வு அறிக்கையுடன் சேர்த்து ஒருங்கிணைந்த திட்டத்தை அனுப்புமாறு கேட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 26 அன்று, சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டம் தொடர்பாக, சென்னையில் முக்கிய கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்க வந்திருந்த ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் மனோகர் லாலிடம், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலையிலேயே கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான தேவைகள் குறித்து, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் அதிகாரிகள் கோவை, மதுரைக்கு சென்று கள ஆய்வு செய்தனர்.
ஆனால், இத்திட்டத்துக்கு தற்போது ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போட்டு, இத்திட்டம் நிறைவேற்றப்படாது என கைவிரித்துள்ளது. இதற்கு 20 லட்சம் மக்கள் தொகை இல்லை என காரணம் காட்டியுள்ளது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை நிராகரித்துவிட்டு பா.ஜ., அரசு ஆளும் மாநிலங்களில் சிறிய ஊர்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது. 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் மக்கள் தொகை 23.5 லட்சமாக உள்ளது. மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் தொகை எண்ணிக்கை 15.8 லட்சமாகவும், புறநகரில் 7.7 லட்சமாகவும் உள்ளது.
இதேபோல், மதுரை மாநகராட்சி பகுதியில் 10.2 லட்சம் மக்கள் தொகையாகவும், புறநகரில் 14.7 லட்சமாக மக்கள் தொகை எண்ணிக்கை உள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் வந்தால், கோவை மற்றும் மதுரையில் உள்ள அனைத்து மக்களும்தான் இந்த சேவையை பயன்படுத்துவார்கள். மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் பயன்படுத்த மாட்டார்கள். எனவே, மதுரை மற்றும் கோவை மாவட்ட மக்கள் தொகை என கணக்கிட்டால் இரு மாவட்டத்திலும் 20 லட்சத்திற்கு மேல் உள்ளனர். ஆனால், ஒன்றிய அரசு அனுமதி தந்து உள்ள ஆக்ராவில் 16 லட்சம் மக்களும், பாட்னாவில் 17 லட்சம் மக்களும், போபாலில் 18.8 லட்சம் மக்களும் உள்ளனர்.
இந்த மூன்று நகரங்களில், ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள மெட்ரோ ரயில் 2017 கொள்கையின் படி 20 லட்சம் மக்கள் தொகையை எட்டவில்லை. ஆனால், இந்த மூன்று நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி தந்து உள்ளது. இதேபோல், உத்தரப் பிரதேசத்தில் கான்பூர், மகாராஷ்டிராவில் நாக்பூர் மற்றும் புனே, மத்தியப் பிரதேசத்தில் இந்தூர் மற்றும் குஜராத்தில் சூரத் உள்ளிட்ட பல நகரங்களுக்கு ஒன்றிய அரசு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நகரங்கள் உள்ள மாநிலங்களில் பாஜ அரசு ஆட்சி நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள சலுகைகளைப் போல, தமிழ்நாட்டில் உள்ள 2ம் நிலை நகரங்களை கருத்தில் கொள்ளவில்லை.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை, கலை பண்பாட்டிற்கு தலைநகராக விளங்கும் மதுரை ஆகிய இரு நகரங்களும் தொழில் நகரங்களாக வளர்ந்து வருகிறது. இந்த இரு நகரங்களும் கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் வேகமாக வளர்ந்த நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. ஐடி, ஏற்றுமதி, நெய்தல், சுற்றுலா, கல்வி, உற்பத்தி என அனைத்திலும் வளர்ச்சி அடைந்து வரும் நகரங்களாக மாறி வருகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 14 ஆண்டுகள் கடந்துவிட்டன.
இந்த இடைப்பட்ட 14 ஆண்டுகளில் கோவை, மதுரை மாநகரின் மக்கள் தொகை 20 லட்சத்தை கடந்து விட்டது. ஆனாலும், ஒன்றிய அரசு 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகையை கணக்கில் கொண்டு, இத்திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளதற்கு கோவை மற்றும் மதுரை மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பிரதமர் மோடி, இன்று கோவை வரும் நிலையில், அந்த நகரத்துக்கான மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
* அடுத்த நடவடிக்கை என்ன? சென்னை மெட்ரோ விளக்கம்
சென்னை மெட்ரோ நிர்வாகம் கூறியிருப்பதாவது: கோவை, மதுரை புதிய மெட்ரோ ரயில் சேவைக்கான திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை. திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. கூடுதல் ஆவணங்களுடன் மீண்டும் திட்ட அறிக்கையை அனுப்புமாறு தமிழக அரசிடம் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு கேட்டுள்ளபடி, கூடுதல் ஆவணங்களுடன் மீண்டும் விரிவான திட்ட அறிக்கை அனுப்பப்படும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள், மக்கள்தொகை அடிப்படையில் நிறுத்த வாய்ப்பில்லை.
சென்னையில் தற்போது 54 கி.மீ. தூரத்திற்கு அமைந்துள்ள மெட்ரோ ரயில்களில் தினந்தோறும் ஏராளமான பயணிகள் பயணிக்கிறார்கள். மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கை 49-ஆக உள்ளது. சென்னையில் இரண்டாவது கட்டமாக, மாதவரம் - சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ், மாதவரம் - சோழிங்கநல்லுார் என, மூன்று வழித்தடங்களில் 118 கி.மீ., தூரம் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவான திட்ட அறிக்கை, தற்போது மாநில அரசின் பரிசீலனையில் இருக்கிறது. மாநில அரசு ஒப்புதலுக்கு பின், ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
சென்னையை தொடர்ந்து, இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை துவங்க திட்டமிடப்பட்டு, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான அறிக்கை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இதில், நெல்லை நகரம், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உகந்தது அல்ல என ஆய்வு செய்யப்பட்டது. அதுபோல், சேலம், திருச்சி குறித்து அரசு பரிசீலனையில் உள்ளது. மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகளை தயார் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில் மதுரை திட்ட அறிக்கை 936 பக்கத்திலும் கோவைக்கு 655 பக்கத்திலும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை தயாரித்தது.
அதில் ரயில் நிலையங்களின் வகைகள், செலவுகள், செயல்படுத்தும் முறைகள், ரயில் நிலைய அமைவிடங்கள் உள்ளிட்ட மொத்த விபரங்களும் இடம் பெற்றிருந்தன. மதுரை திருமங்கலம்-ஒத்தக்கடை வரை 31.93 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தவிருந்தது. 27 கி.மீ. மேம்பால பாதையில் 23 மெட்ரோ ரயில் நிலையங்களும் 4.65 கி.மீ. சுரங்கப்பாதையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமையவிருந்தது. கோவையில் 39 கி.மீ. தூரத்தில் அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையும் உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வழியம்பாளையம் பிரிவு வரையிலும் மெட்ரோ ரயில் மேம்பால பாதையில் பாதை அமைகிறது. மொத்தம் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இவ்வாறு நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
* பாஜ ஆளும் நகரங்களுக்கு மட்டும் அனுமதி
நகரம் மக்கள் தொகை
ஆக்ரா 16 லட்சம்
பாட்னா 17 லட்சம்
போபால் 18.8 லட்சம்
இதேபோல், பாஜ ஆளும் மாநிலங்களில் உள்ள இரண்டாம் நிலை நகரங்களான கான்பூர், நாக்பூர், புனே, இந்தூர், சூரத் ஆகிய இடங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
2011ம் ஆண்டு நடந்த
மக்கள் தொகை
கணக்கெடுப்பின் படி
கோவை 23.5 லட்சம்
மதுரை 24.9 லட்சம்
தற்போதைய வாக்காளர்கள் எண்ணிக்கை
கோவை 30,81.594
மாநகரில் 15,38,411
மதுரை 27,40,631
மாநகரில் 16,15,990
* இன்று போராட்டம்
மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு நிராகரித்ததற்கு, பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு கோவை மாவட்ட குழு சார்பில் இன்று காலை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
* அப்பட்டமான அநீதி மதுரை எம்பி கண்டனம்
மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறுகையில், ‘‘கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டது அப்பட்டமான அநீதி. பொருளாதாரம், சமூகம், கல்வி ரீதியாக ஒன்றிய அரசுக்கு அதிகம் வருவாய் ஈட்டி தருவதில் முதலிடம் வகிக்கும் தமிழகத்தில் சென்னையில் மட்டும் தான் மெட்ரோ ரயில் திட்டம் உள்ளது. ஒற்றை நகரத்தில் மட்டுமே இத்திட்டம் இயங்குவதால் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்து, ஒன்றிய அரசின் நிதி கிடைத்தால் திட்டப்பணிகளை தொடங்க தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதை பரிசீலனையில் வைத்திருந்த ஒன்றிய அரசு ரத்து செய்திருப்பது, அப்பட்டமான தமிழர் விரோத நடவடிக்கை.தமிழ்நாட்டின் மீது வைத்திருந்த கசப்பை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். ’’ என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில், ‘‘மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை இருப்பதாக கூறி நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் வஞ்சகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. குருகிராம், புவனேஷ்வர், ஆக்ரா, மீரட் உள்ளிட்ட நகரங்களின் மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவாக இருந்தபோதும் அங்கு, திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது எப்படி?’’ என கேள் எழுப்பியுள்ளார்.