தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பட்டமளிப்பு விழா, 106 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்: ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்
திருக்கழுக்குன்றம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ தனபால் உள்பட 18 பேர் பிஎச்டி பட்டம் பெற்றனர். காமன்வெல்த் கல்விக்கழக ஊடக மையத்தின் விருது மற்றும் ரொக்கப்பரிசு ரூ.25 ஆயிரம் எம்சிஏ மாணவி லதாவுக்கு வழங்கப்பட்டது. மேலும் கேபிஆர் அறக்கட்டளை விருதுகளை எம்எஸ்சி உளவியல் மாணவிகள் திவ்யா, லட்சுமி, எம்எஸ்டபிள்யூ மாணவி சோனா, எம்ஏ பொருளாதாரம் மாணவி தேவி, எம்ஏ சமூகவியல் மாணவி பாஸியா பேகம், பிஎஸ்சி உயிரி-வேதியியல் மாணவி ரேணுகா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பட்டமளிப்பு விழா வாயிலாக இளங்கலை, முதுகலை பட்டம் மற்றும் பட்டய படிப்புகளில் மொத்தம் 6,940 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நாகேஸ்வர் ராவ் பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
அவர் பேசும்போது, ”வரும் காலத்தில் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், தானியங்கி உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் முக்கிய இடங்களை வகிக்கும். எனவே, மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களையும், புதிய விஷயங்களையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உடையவர்களாக இருக்க வேண்டும். கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும்” என்றார். முன்னதாக, துணைவேந்தர் ஆறுமுகம் வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பதிவாளர் செந்தில்குமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமாமகேஸ்வரி, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், கலந்துகொண்டனர்.