தமிழ்நாட்டில் நோட்டரி எண்ணிக்கை அதிகரிப்பு: ஒன்றிய சட்ட அமைச்சகம் அறிவிப்பு
புதுடெல்லி: தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களில் நோட்டரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்கும் வகையில் ஒன்றிய சட்ட அமைச்சகம் விதிகளில் மாற்றம் செய்துள்ளது. ஆவணங்களில் மோசடி செய்வதை தடுக்கும் வகையில், சான்றாவணங்களில் கையொப்பமிட்டு அவற்றை அங்கீகரிக்க நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான 1956ம் ஆண்டு நோட்டரி சட்ட விதிகளில் ஒன்றிய சட்ட அமைச்சகம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருத்தம் செய்துள்ளது.
இந்த திருத்தத்தின்படி, குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான், நாகலாந்து மாநிலங்களில் நோட்டரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 2,500 நோட்டரிகள் உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை 3,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் 2,900ல் இருந்து 6,000 ஆகவும், ராஜஸ்தானில் 2,000ல் இருந்து 3,000 ஆகவும், நாகலாந்தில் 200ல் இருந்து 400 ஆகவும் நோட்டரிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகை வளர்ச்சி, மாவட்டங்களின் எண்ணிக்கை, தாலுக்காக்கள் உள்ளிட்டவை கணக்கில் கொண்டு அந்தந்த மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.