வாணியம்பாடியில் முகாம் செல்லப்பிராணிகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்துவது அவசியம்
*கால்நடைத்துறை டாக்டர் விழிப்புணர்வு
வாணியம்பாடி : செல்லப்பிராணிகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்துவது அவசியம் என வாணியம்பாடியில் நடந்த முகாமில் கால்நடைத்துறை டாக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
உலக வெறிநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி நேற்று வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு இலவச கால்நடை பராமரிப்பு மருந்தகத்தில் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. இதில் கால்நடை மருத்துவர் கோகிலாசன் கலந்துகொண்டு தடுப்பூசிகளை செலுத்தினார்.
இதில் ஜாப்ராபாத் மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களின் வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். முகாமில் செல்லபிராணி வளர்ப்பவர்களிடம் கால்நடை டாக்டர் பேசியதாவது:
வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் சிறார்கள் தங்களது செல்லப்பிராணிகளான நாய், பூனைகளிடம் பாதுகாப்பற்ற முறையில் விளையாடுவதை அனுமதிக்க கூடாது. வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் குறிப்பிட்டகால இடைவெளியில் தங்களின் செல்லபிராணிகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். இது செல்லப்பிராணிகளின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் உறுதிசெய்யும். இவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.