மாணவிகள் பாலியல் புகார்; திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு
திருச்சி: மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேருக்கு கட்டாய பணி ஓய்வு கொடுத்து கல்லூரி கல்வி ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவராக பணியாற்றி, பின்னர் வணிகவியல் துறைக்கு மாற்றப்பட்டவர் பேராசிரியர் கணேசன். தொலை உணர்வு துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி வந்தவர் ரமேஷ். இவர்கள் 2 பேர் மீதும் சில மாணவிகள் பாலியல் ரீதியாக தங்களை துன்புறுத்தியதாக தனித்தனியாக புகார் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் பாலியல் புகார்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட உள் புகார் குழு விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் பேராசிரியர்கள் 2 பேர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இருப்பதால், அவர்களை பணியில் இருந்து நீக்கவோ அல்லது கட்டாய ஓய்வு கொடுக்கவோ நடவடிக்கை எடுக்கலாம் என்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்கல்வி துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த பரிந்துரைக்கு தமிழக அரசின் கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி ஒப்புதல் அளித்து நடவடிக்கை எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து பேராசிரியர்கள் இருவருக்கும் நேற்று முன்தினம் கட்டாய பணி ஓய்விற்கான ஆணை வழங்கப்பட்டது. இதில் பேராசிரியர் ரமேஷ் அடுத்த ஆண்டு பணி ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.