சேந்தமங்கலம் எம்எல்ஏ மறைவு; ‘எளிமையும் அமைதியும்தான் அடையாளம்’: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
சென்னை: திமுக இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை:‘மலையில இருந்து கொஞ்சம் தேனும் பழமும் எடுத்துட்டு வந்திருக்கேன். உங்களை குறிஞ்சி இல்லத்தில் சந்திச்சு கொடுக்கணும்!’ சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பொன்னுசாமி ஒவ்வொரு சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல்நாளில் இப்படித்தான் என்னை எதிர்கொள்வார். அப்படி கடந்த வாரம் சட்டமன்றத்தில் சந்தித்த அவருக்கு இந்த வாரம் அஞ்சலி செலுத்துவேன் என நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை.
எளிமையும் அமைதியும்தான் பொன்னுசாமியின் அடையாளம். ஆடம்பரம் இல்லாதவர், அதிர்ந்து பேசாதவர். நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் நிறைந்த கொல்லிமலைதான் சொந்த ஊர். அந்த மலை மீதும் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். சோளக்காடு பேருந்து நிலையம் அருகில் பழக்கடை நடத்தி வந்தவருக்கு, அதுதான் அவரின் வாழ்வாதாரமாகவும் இருந்திருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் ஆனப்பிறகும்கூட தினமும் அந்தக் கடையில் அமர்ந்து வியாபாரம் செய்வதையும், மக்களை சந்திப்பதையும் வழக்கமாக வைத்திருப்பார் என்கிறார்கள். அதுவும் அன்னாசிப் பழத்தை தோல் சீவி, நறுக்கி, மிளகாய்ப்பொடி போட்டுத் தரும் அவரின் வேகத்தை சிலாகிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
என்னை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும், ‘சேந்தமங்கலம் தொகுதிக்காக முதல்வர் இந்தந்த விஷயங்களைச் செய்திருக்கார். நீங்க இதையெல்லாம் செய்துகொடுங்க’ என்று உரிமையோடு மனுக்களை அளிப்பார். முதல்வரிடம் பேசி, தன் தொகுதிக்கு ஒரு தொழில் பயிற்சி நிலையம், கொல்லிமலையில் ஒரு ரத்த வங்கி, மிளகு பதப்படுத்தும் தளம்... என பல திட்டங்களை அங்கு கொண்டுவந்துள்ளார். நாமக்கல் துறையூர் பிரதான சாலையை 40 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தும் பணியை தொகுதிக்காக முடித்துத் தந்துள்ளார்.
சேந்தமங்கலம் தொகுதியின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் வகையில், என்னிடம் அளித்த மனு தற்போது ரூ.400 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர்த் திட்டமாக செயல்வடிவம் பெற உள்ளது. பழங்குடி மக்கள் 500 பேருக்கு தனித்தனி வீடுகள் கட்ட அனுமதி பெற்று வேலைகள் தொடங்க உள்ளன. இப்படி தன் தொகுதி மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்தான் பொன்னுசாமி. அவரின் மனதுக்கு மிகவும் நெருக்கமான கொல்லிமலையிலேயே அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. யாருக்கும் தீங்கு நினைக்காத, எளிய மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர், அவர் எப்போதும் எனக்கு தரும் சுத்தமான மலைத் தேன்-பழங்களின் சுவையைப்போல, அந்த மலையைப்போல காற்றைப்போல என்றும் நம்மிடையே வாழ்ந்துகொண்டு இருப்பார். அவரின் கட்சி பணி, மக்கள் பணி இம்மண்ணில் என்றென்றும் நிலைத்திருக்கும்.