முன்பே ராஜினாமா செய்திருக்கலாம் மனோஜ் பாண்டியன் பரிதாபத்துக்குரியவராகி விட்டார் செங்கோட்டையன்: மாஜி அமைச்சர் வைகைச்செல்வன் பேட்டி
சென்னை: இப்போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் மனோஜ் பாண்டியன் 2, 3 வருடங்களுக்கு முன்பே ராஜினாமா செய்திருக்கலாம். செங்கோட்டையன் பரிதாபத்திற்குரியவர் ஆகி விட்டார் என்று முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வம் கூறினார். காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி குறித்து பூத் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில், அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் பங்கேற்பதற்காக வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், கட்சி உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும், அதிமுகவின் உண்மையான இயக்கம் அவருடைய தலைமையிலேயே நடைபெறுகிறது. மனோஜ் பாண்டியன் குடும்பத்தினர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரால் வளர்க்கப்பட்டவர்கள்.
அரசியல் வாய்ப்புகளை அண்ணா திராவிட முன்னேற்ற கழகமே வழங்கியது. இவ்வளவு நன்மை செய்த இயக்கத்திற்கு எதிராக மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்திருப்பது நன்றிக்கேடாகும். இப்போது, தனது பதவியை ராஜினாமா செய்யும் மனோஜ் பாண்டியன், கடந்த 3, 4 வருடங்களுக்கு முன்பே ராஜினாமா செய்திருக்கலாமே. அதிமுக உறுதியுடன் முன்னேறும். மேலும், பரிதாபத்துக்குரியவர் ஆகிவிட்டார் செங்கோட்டையன்.