பொன்னமராவதி பகுதியில் உழவடை செய்யும் விவசாயிக்கே நிலம் உடைமையாக்க வேண்டும்
*சின்னத்துரை எம்எல்ஏ பேட்டி
பொன்னமராவதி : பொன்னமராவதி அருகே உள்ள தேவன்பட்டியில் நான்கு தலைமுறைகளாக உழவடை செய்து வரும் விவசாயிகளுக்கே நிலத்தை உடைமையாக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தெரிவித்தார்.
பொன்னமராவதி ஒன்றியம் வார்ப்பட்டு ஊராட்சியை சேர்ந்த தேவன்பட்டி, பொய்யாமணிப்பட்டி மற்றும் வேலம்பட்டி ஆகிய மூன்று ஊர்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள அருகிலுள்ள பொழிஞ்சி வயல் மற்றும் பொழிஞ்சிகாடு ஆகிய பகுதிகளில் 48 ஏக்கருக்கு மேல் உள்ள நிலங்களில் நான்கு தலைமுறைகளுக்கு மேலாக உழவடை விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கண்ட நிலங்களை தனிநபர் ஒருவர் வாங்கியதாக கூறி இவர்களை வெளியேற்ற முயற்சிகள் நடைபெற்று வருகிறது. திங்களன்று விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவரும் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான சின்னத்துரை தேவன்பட்டியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள்-விவசாய தொழிலாளர்களின் குடும்பத்தினரை சந்தித்து கள ஆய்வில் ஈடுபட்டார். சம்பந்தப்பட்ட பொழிஞ்சி வயல், பொழிஞ்சி காடுகளை பார்வையிட்டார். பின்னர், அவர் கூறியதாவது:
தேவன்பட்டி, வேலம்பட்டி, பொய்யாமணிப்பட்டி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் நான்கு தலைமுறையாக குத்தகை சாகுபடி செய்து வரும் சூழலில், நிலங்கள் என்பது எங்கள் முன்னோர்களுக்கு அனுபவம் மற்றும் சொந்தமானது.
இதை தனி நபர்கள் எங்கள் முன்னோர்களுக்கு செலவுக்கு பணம் கொடுப்பது, கடன் கொடுப்பது என்கிற முறைகளின் மூலமாக எங்கள் முன்னோர்களிடமிருந்து இந்த நிலங்கள் முழுவதும் எடுத்துக் கொண்டனர்.
ஆகவே, இந்த நிலங்களை யாரும் வாங்குவதற்கோ விற்பதற்கோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எனவே, நிலங்களை எங்களுக்கு சொந்தமாக்கி தர வேண்டுமென அதிகாரிகளையும் தமிழக அரசையும் வலியுறுத்தி போராடிக் கொண்டு உள்ளோம் என எங்களை சந்தித்த பெரியவர்கள் தெரிவித்தனர்.
மேற்கண்ட நிலங்களை வேறு யாரோ ஒரு தனி நபர் வாங்கியுள்ளதாகவும் நான்கு தலைமுறையாய் நிலத்தை உழுது கொண்டு தங்கள் அனுபவத்தில் உள்ள நிலங்களை காலி செய்ய அச்சுறுத்தப்படுவதாகவும் இங்கு உள்ள விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மிகப்பெரிய அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆகவே, எங்களுக்கு பாதுகாப்பு கொடுத்து இந்த நிலங்களை மீட்டு எங்களுக்கு பட்டா வழங்கி சொந்தமாக்க வேண்டும் என்கிற அடிப்படையில் விவசாயிகள் முழுவதும் இப்போது ஒன்று திரண்டு இருக்கிறார்கள்.இந்த கோரிக்கைக்காக நடைபெறுகிற அனைத்து போராட்டங்களிலும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உறுதியாக நின்று போராடும் என்றார்.