நெல், பருத்தி, வாழைக்கு பின் வெண்டைக்காய் சாகுபடி
*தினமும் வருமானம் விவசாயிகள் மும்முரம்
செம்பனார்கோயில் : நெல், பருத்தி, வாழைக்கு பின் ஒரு சில இடங்களில் வெண்டைக்காய் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தினமும் வருவாய் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலானோர் பிரதான தொழிலாக விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நெல், பருத்தி, வாழை, வெண்டைக்காய், கீரை வகைகள் போன்ற விளை பொருட்களை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் செம்பனார்கோயில் அருகே கீழையூர், கருவிழந்தநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர்.
இதுகுறித்து வெண்டைக்காய் சாகுபடி விவசாயி ஒருவர் கூறுகையில், இந்த பகுதியில் பெரும்பாலும் நெல், பருத்தி, வாழை உள்ளிட்டவைகள் தான் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது வெண்டைக்காய், சோளம் மற்றும் கீரை வகைகளையும் சாகுபடி செய்வோம். அந்த வகையில் கடந்த மாத தொடக்கத்தில் வெண்டைக்காய் சாகுபடி செய்தேன்.
வெண்டைக்காய் மக்கள் விரும்பி சமைத்து சாப்பிடக்கூடிய காய்கறிகளில் ஒன்றாகும். இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் அறிவு வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வெண்டைக்காயில் உள்ள வழவழப்புத் தன்மையில்தான் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன.
மேலும் தினமும் வருவாய் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.இதனை எல்லா மண் வகையிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்ணில் மிகவும் நன்றாக வளரும். சாகுபடியின்போது மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழவேண்டும்.
அப்போது தான் விரைந்து விளைச்சலாகும். வெண்டை சாகுபடிக்கு கோ 2, எம்டியு 1, அர்கா அனாமிகா போன்ற ரகங்கள் உகந்ததாக இருக்கும். வெண்டைக்காயை சாகுபடி செய்வதற்கான செலவு குறைவாகும். காய்கள் முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்து விடவேண்டும். அப்போது தான் நல்ல மகசூல் கிடைக்கும் என்று கூறினார்.