ஆன்லைன் மூலம் பொதுமக்களை ‘டிஜிட்டல் கைது’ செய்ய பயன்படுத்தப்பட்டது சென்னையில் 15 சிம் பாக்ஸ்கள் பறிமுதல்
* 6 சைபர் குற்றவாளிகளை கைது செய்து விசாரணை, தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு நடவடிக்கை
சென்னை: சென்னையில் நடந்த அதிரடி சோதனையில் மோசடிக்கு பொதுமக்களை தொடர்பு கொள்ள பயன்படுத்தப்பட்ட 15 சிம் பாக்ஸ்களை தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து சிம்பாக்ஸ் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு டிஜிட்டல் கைது மூலம் பணத்தை பறித்து வருவதாக தமிழ்நாடு மாநில இணையவழி குற்றப்பிரிவுக்கு உளவுத்துறை ரகசிய தகவல் அளித்தது.
அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தமிழ்நாடு இணையழி குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் தலைமையில் மாநில சைபர் குற்ற விசாரணை மைய எஸ்பி ஷஹனாஸ் வழிகாட்டுதலின்படி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் கொண்டு குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், சென்னை பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் பயன்படுத்தப்பட்டு வந்த 14 சிம் பாக்சுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் விசாரணைக்கு பயந்து ராமநாதபுரத்தில் 5 சிம்பாஸ்களை குற்றவாளிகள் அழித்துவிட்டது தெரியவந்தது. மேலும், மோசடிக்கு உடந்தையாக டெல்லியில் உள்ள நபர்கள் செயல்பட்டது தெரியவந்தது. அதில் டெல்லி, மும்பை, பீகார் மாநிலத்தில் இருந்து ஒரு மோசடி நபரின் தலைமையில் இயங்கி வந்தது தெரியவந்தது. அதன்படி தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு அதிகாரிகள் டெல்லி சென்று நரேலாவில் டெல்லி போலீசார் உதவியுடன் சோதனை நடத்தினர்.
அதில் இந்த மோசடிக்கு முக்கிய குற்றவாளியான பீகார் மாநிலத்தை சேர்ந்த சோஹெல் அலாம் நுத்தீன் என்பவர் இயங்கி வந்தது தெரியவந்தது. அவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டான். மேலும், அவனது கூட்டாளியான பீகார் மாநிலத்தை சேர்ந்த தாரிக்அலாம்(19), லோகேஷ்குமார்(33) மற்றும் அசோக்குமார்(40) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். டெல்லி நரேலாவில் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய 16 சிம்பாக்ஸ்கள் மற்றும் நிலோதியில் இருந்து 8 சிம்பாக்ஸ்கள் என மொத்தம் 24 சிம்பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சிம்பாக்ஸ்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து மோசடி நபர்கள் பொதுமக்களை ‘டிஜிட்டல் கைது’ செய்ய பயன்படுத்தி வந்தது விசாரணையில் உறுதியானது. அந்த வகையில் தமிழக மக்களை வெளிநாடுகளில் இருந்து மோசடி நபர்கள் ஆன்லைன் மூலம் ‘டிஜிட்டல் கைது’ மூலம் பணம் பறிக்கும் கும்பல் பயன்படுத்திய 44 சிம் பாக்ஸ்களை தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு அதிகாரிகள் கடந்த 2 மாதத்தில் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுதொடர்பாக பொதுமக்களுக்கு கூடுதல் டிஜிபி சந்தீப் மீட்டல் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* வங்கி கணக்குகளை திறப்பது, சிம்பாக்ஸ்களை இயக்குவது, சிம்பாக்ஸ் அல்லது எந்த ஒரு மின்னணு சாதனத்தையும் மறைவாக எடுத்து செல்வது போன்ற வேலைகளுக்கான கமிஷன் வாக்குறுதிகளால் ஏமாற வேண்டாம். இவை தண்டனைக்குரிய குற்றமாகும்.
* வீட்டு உரிமையாளர்கள், வீடு வாடகைக்கு விடும் போது அந்த இடத்தில் நடைபெறும் செயல்பாடுகளை சரிபார்க்க வேண்டும். தகுந்த அடையாள சான்றுகளை உறுதி செய்யாமல் எந்த அந்நியர்களுக்கும் வீடு வாடகைக்கு விடக்கூடாது.
* நீங்கள் குற்றச் செயலில் தொடர்புடையவர் என்று கூறும் தொலைபேசி அழைப்புகளை பெற்றால், பதற்றம் கொள்ள வேண்டாம். மோசடிக்காரர்கள் பயத்தை உண்டாக்கி பணம் பெற முயல்வார்கள் ‘டிஜிட்டல் கைது’ அல்லது ஆன்லைன் கைது என்ற கருத்ேத இல்லை.
* அரசு அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகள் எந்த புகார் அல்லது சரிபார்ப்பிற்காகவும் பணம் கேட்க மாட்டார்கள்.
* ஆதார், பான், வங்கி விவரங்கள் அல்லது ஓடிபிகள் உள்ளிட்ட தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களை தொலைபேசி அல்லது வீடியோ அழைப்பின் மூலம் பிறருக்கு பகிர வேண்டாம்.
* அதிகாரிகள் எனக்கூறி ஏ.ஐ அல்லது பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை பயன்படுத்தி மோசடிக்கு முயலும் அந்நியர்களிடம் இருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம்.
* நீங்கள் ஏதேனும் இணையவழி குற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று நீங்கள் சந்தேகித்தால் அல்லது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டை கண்டறிந்தால், உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம். நிதி மோசடிகள் ஏற்பட்டால் இணையவழி க்ரைம் உதவி எண்: 1980ஐ தொடர்பு கொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in இல்புகார் அளிக்கவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* சிம் பாக்ஸ் என்றால் என்ன?
சிம் பாக்ஸ் என்பது, இணைய இணைப்பு மூலம் குரல் அழைப்புகளை மேற்கொள்ள உதவும் சாதனம். சர்வதேச மொபைல் அழைப்புக் கட்டணங்கள் அதிகமாக இருந்தபோது, குறைந்த கட்டணத்தில் பேசுவதற்கு இந்த முறை பயன்பட்டு வந்தது. தற்போது இதற்கு அவசியமில்லை என்றாலும், மோசடி பேர்வழிகள் பொதுமக்களை ஏமாற்றுவதற்கு இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.