மேட்டுப்பாளையம் அருகே அகழியில் இறந்து கிடந்த காட்டு யானை: வனத்துறையினர் விசாரணை
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே அகழியில் இறந்து கிடந்த ஆண் யானை குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் ஓடந்துறை காப்புக்காடு வனப்பகுதியை ஒட்டி உள்ள திருமலைராஜ் என்பவருக்கு சொந்தமான விளை நிலத்தை ஒட்டியுள்ள அகழியில் இன்று காலை காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வனச்சரகர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று விசாரித்தனர்.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜூக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வன கால்நடை மருத்துவர்கள், வன ஆர்வலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து யானைக்கு இன்று பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘அகழியில் இறந்த நிலையில் காணப்பட்டது சுமார் 12 முதல் 15 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஆகும். அகழியை தாண்ட முற்பட்டபோது நிலை தடுமாறி மார்பு பகுதி அகழி மீது மோதியதில் யானை இறந்திருக்கலாம். பிரேத பரிசோதனைக்கு பிறகே யானை இறப்பிற்கான முழு விவரம் தெரியவரும்’’ என்றனர்.