மயிலாடுதுறை பிரசார பயணத்தில் விஜயகாந்த் பாடலுக்கு நடனமாடிய பிரேமலதா: வீடியோ வைரல்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பிரசார பயணத்தில் ‘வாராரு... வாராரு... கள்ளழகர் வாராரு’... என்ற விஜயகாந்த் பாடலுக்கு பிரேமலதா திடீரென நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் இரவு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ‘உள்ளம் நாடி இல்லம் தேடி’ பிரசாரம் பயணம் மேற்கொண்டார்.
அப்போது, சின்ன கடைவீதியில் ‘மக்களை தேடி மக்கள்’ தலைவர் கேப்டன் ரதத்திற்கு படையல் இட்டு ரோடு ஷோவாகவும் நடந்தும், ரதத்தில் ஏறியும் மக்களை சந்தித்து கையசைத்தப்படி சென்றார். அப்போது, சின்னகடை வீதி பகுதியில் வாராரு... வாராரு... கள்ளழகர் வாராரு... என்று விஜயகாந்த் நடித்த கள்ளழகர் திரைப்பட பாடல் ஒலி பரப்பப்பட்டது.
அந்த பாடலை ரசித்து கேட்டு உற்சாகமடைந்த பிரேமலதா திடீரென பிரசார வாகனத்தில் அமர்ந்திருந்த படி, கூட்டத்தினரை நோக்கி கைகளை உயர்த்தி கைஅசைவு நடனமாடினார். தொடர்ந்து உற்சாகத்துடன் வாகனத்தில் இருந்த கைப்பிடியை பிடித்து நின்ற நிலையிலும் இசைக்கேற்ப நடன அசைவுகளை காட்டி நடனமாடினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.