காரையாறு பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை; 100 ஆண்டு பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது: மலைக்கிராமங்களில் 8 மணி நேரம் மின்தடை
விகேபுரம்: காரையாறு அணை பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ராட்சத ஆலமரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் மலைக்கிராமங்களில் 8 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காரையாறு, சின்ன மைலார், அகஸ்தியர் காணி குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட வனப்பகுதிகளுக்கு பாபநாசம் லோயர் கேம்ப் பகுதியில் இருந்து மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அடர் வனப்பகுதியான இங்கு பல்வேறு வகையான ராட்சத மரங்கள் வளர்ந்து நிற்கும் நிலையில் கடந்த சில நாட்களால் தென்மேற்கு பருவமழை தீவிரம்காட்டி வருகிறது.
குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்வதோடு பலத்த காற்றும் வீசுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை காரையாறு அணை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பலத்த சூறை காற்றுடன் கனமழை பெய்தது. இதனிடையே காரையாறு அணையின் அடிவாரத்தில் நூறு ஆண்டுகளை கடந்து இருந்துவந்த ராட்சத ஆலமரம் வேரோடு சாய்ந்ததோடு அணைக்கு செல்லும் மெயின் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் காரையாறு, சின்ன மைலார், காணி குடியிருப்பு, சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கான மின்விநியோகம் சுமார் 8 மணி நேரம் துண்டிக்கப்பட்டது.
தகவலறிந்து மின்வாரிய பொறியாளர் விஜயராஜ் மேற்பார்வையில் சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், வனத்துறையினரோடு இணைந்து சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த ராட்சத ஆலமரத்தை மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் துண்டுதுண்டுகளாக வெட்டி அகற்றினர். சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மின்சாரம் மீண்டும் விநியோகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து காரையார், சின்ன மைலாறு, அகஸ்தியர் காணி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் படிப்படியாக வழங்கப்பட்டது.