தமிழ்நாட்டிற்கு சர்வதேச தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வெளிநாடு பயணம்: ஜெர்மன், இங்கிலாந்து நாடுகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
சென்னை: தமிழ்நாட்டிற்கு சர்வதேச முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வெளிநாடு செல்கிறார். அதன்படி ஜெர்மன், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று, உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்திக்கிறார். அப்போது, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக 5வது முறையாக வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளார்.
இந்த முறை அவர் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். அதன்படி நாளை (30ம் தேதி) சென்னையில் இருந்து விமானம் மூலம் ஜெர்மனிக்கு செல்கிறார். அங்கு 3 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 1ம் தேதி இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டன் நகருக்கு செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
ஜெர்மன், இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் பல்வேறு தொழிலதிபர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது தமிழகத்திற்கு தொழில் தொடங்க வருமாறு, அவர்களுக்கு முதல்வர் அழைப்பு விடுக்கிறார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற இருக்கிறார். லண்டனில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்க உள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து, ஜெர்மனி இரு நாடுகளிலும் சுமார் 10 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 8ம் தேதி சென்னை திரும்புகிறார். தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் முதலமைச்சரின் தொழில் முதலீடு ஈர்ப்பு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆகஸ்ட் 30ம் தேதி (நாளை) சென்னையில் இருந்து புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின், செப்டம்பர் 8ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முதலீடுகளை ஈர்க்க உள்ளார்.
ஆகஸ்ட் 31ம் தேதி ஜெர்மனியில் உள்ள அயலக அணி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். செப்டம்பர் 1ம் தேதி ஜெர்மனியில் இருந்து லண்டன் செல்கிறார். செப்டம்பர் 2 அல்லது 3ம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில்முனைவோர்களை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. செப்டம்பர் 4 அல்லது 5ம் தேதி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள அயலகத் தமிழர் நல வாரியத்தின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
செப்டம்பர் 6ம் தேதி லண்டனில் உள்ள தமிழர் நல வாரியம் நடத்தும் பல்வேறு நிகழ்வுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். செப்டம்பர் 7ம் தேதி லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டு 8ம் தேதி அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடையும் வகையில் அவரது பயண திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு இன்று அறிவிக்கும். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணத்தின்போது தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தொழில் துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் உடன் செல்கிறார்கள்.