கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 13ம்தேதி கடைசி நாள்
சென்னை: நடப்பாண்டு கேட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 13ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்தியாவில் ஐஐஎம் போன்ற தேசிய முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர கேட் (Common Admission Test-CAT) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேணடும். அதன்படி நடப்பாண்டுக்கான கேட் தேர்வு நாடு முழுவதும் 170 மையங்களில் வரும் நவம்பர் 30ம் தேதி கணினி வழியில் நடைபெற உள்ளது.
இத்தேர்வை கோழிக்கோடு ஐஐஎம் நடத்த உள்ளது. மேலும், காலை 8.30-10.30, மதியம் 12.30-2.30, மாலை 4.30-6.30 என மொத்தம் 3 அமர்வுகளாக தேர்வானது நடைபெறும். இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 13ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் https://iimcat.ac.in எனும் வலைத்தளத்தில் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.1,300ம், மற்ற தேர்வர்கள் ரூ.2600ம் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டைவிட தேர்வுக் கட்டணம் அதிகபட்சம் ரூ.100 வரை உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தகுதியான தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் நவம்பர் 5ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.