ஓசூர், சூளகிரியில் விமான நிலையத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு
ஓசூர் : ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் முக்கிய தொழில் நகரங்களில் ஓசூர் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஓசூரில் குண்டூசி முதல் விமானத்தின் உதிரி பாகங்கள் வரை தயாரிக்கப்பட்டு, வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் முதலீட்டாளரகள் ஓசூரில் மேலும் தொழில் நிறுவனங்கள் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழக அரசும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக கட்டமைப்புகளை மேற்கொண்டு வருகிறது. ஓசூர் வரும் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் நிறுவன பிரதிநிதிகள், கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலைத்திற்கு வந்து, அங்கிருந்து சாலை வழியாக ஓசூருக்கு வருகின்றனர்.
அதே போல், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உதிரிபாகங்கள் பெங்களூருவில் உள்ள சரக்கு விமானங்கள் மூலம், ஏற்றுமதி செய்வதற்காக கனரக வாகனங்களில் கொண்டு செல்லும் போது, பெங்களூருவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது முக்கிய பிரச்னையாக உள்ளது.
தொழில் முதலீட்டாளர்கள் சிரமத்தை குறைக்கவும், உதிரி பாகங்களை சிரமின்றி கொண்டு செல்லவும், ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பை, கடந்தாண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பின்னர், ஓசூர் அருகே பெளகொண்டப்பள்ளி, சூளகிரி ஆகிய பகுதிகளில் தேர்வு செய்யப்பட்டது.
அப்பகுதிகளில் இந்திய விமான நிலையங்களின் ஆணையம் வாயிலாக, டிக்கோ எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், மிகவும் உயரமான கட்டிடங்கள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.
இதில் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே அடவனப்பள்ளி, அளேந்தம், வெங்கடேஷ்புரம், பலவனப்பள்ளி, முத்தாலி ஆகிய கிராமங்களையொட்டி 2000 ஏக்கர் பரப்பளவில், விமான நிலைம் அமைப்பதற்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் தமிழக அரசு அனுமதி கேட்டுள்ளது.
இதற்கு சூளகிரி மற்றும் ஓசூர் பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று ஓசூர் அருகே அடவனப்பள்ளியில் 20 கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆலோனை கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்தில் ஏற்கனவே தொழிற்சாலைகள் மற்றும் சேட்டிலைட் ரிங்ரோடு அமைக்க பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை இழந்துள்ளோம். இதனால் விவாயிகள் பலர் கூலி வேலைக்கு சென்று விட்டனர். இனியும் நிலத்தை இழக்க முடியாது. எனவே, சூளகிரி மற்றும் ஓசூர் பகுதியையொட்டி சர்வதேச விமான நிலையம் அமைக்க நிலங்கள் வழங்க முடியாது. எங்களை மீறி நிலங்கள் எடுத்தால் போராட்டங்கள் நடத்தப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில், ‘ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியில் தொழிற்சாலைகள் தொடங்கவும் மற்றும் புதிய சாலைகள் அமைக்க சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை விவசாயிகள் இழந்துள்ளனர்.
பண்ணையாளர்களாக இருந்த விவசாயிகள், தற்போது கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சூளகிரி மற்றும் ஓசூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கை வேகமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்த உள்ளனர். இதனால் 12 கிராமங்கள் பாதிக்கும். எனவே, விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் ஒன்று திரண்டு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் விமான நிலையம் அமைக்க விவசாய நிலத்தை வழங்க முடியாது.
விமான நிலையம் அமைக்க முயற்சி செய்தால் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,’ என்றனர். இந்த கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, எஸ்டி.ஆர்.ஆர். தலைவர் முனி வெங்கடப்பா, துணை தலைவர் அட்டூர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.