விவசாயி அடித்து கொலை தவெக நிர்வாகி கைது
சிவகங்கை: சிவகங்கை அருகே விவசாயியை அடித்து கொன்ற வழக்கில் தவெக மாணவரணி அமைப்பாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை அருகே செவல்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சந்திரன் (54). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் கீரைகளை எடுத்துக் கொண்டு சிவகங்கைக்கு காரில் வந்தார். அப்போது தமறாக்கி கிராமத்தை சேர்ந்த பிரபுகுமார் (45), அருண்பிரகாஷ் (20) இருவரும் மற்றொரு காரில் வந்தனர்.
கூட்டுறவுபட்டி விலக்கு அருகே இரண்டு காரும் நேருக்கு நேர் மோதும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து சந்திரன் ஓட்டி வந்த காரை மறித்த பிரபுகுமார், அருண்பிரகாஷ் இருவரும் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், வீட்டிற்கு வந்த சந்திரன் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ேபாலீசார் விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்து பிரபுகுமார், அருண் பிரகாஷ் இருவரையும் நேற்று கைது செய்தனர். இதில் பிரபுகுமார் அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர் ஆவார். இவர் தற்போது தவெக மாவட்ட மாணவரணி அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.